பொலிஸாரின் இலஞ்சத்திற்கு எதிராக, மரத்திலேறி போராடிய முதியவர் கைது
பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரத்திலேறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மேடைக்கு நேர் எதிராக, ஏ9 பிரதான வீதியோரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் ஏறி கையில் ஒரு பதாதையுடன் உரத்த குரலில் கோசம் எழுப்பியுள்ளார் குறித்த முதியவர்.
அந்த முதியவர், பொலிஸார் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள (ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் இலஞ்சம் பெறுவதாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டம் நடத்திய அந்த முதியவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்ததுடன், நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களிலேயே அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த முதியவரை இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முதியவரால் சுட்டிக்காட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் எவ்வித விசாரணைகளும் இன்றி வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோவால் இன்று காலை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
This is call democratic republic srilanka.
ReplyDelete