உங்கள் இதயத்தின், எண் என்ன..?
படிக்கும்போது தேர்வு மதிப்பெண், மேற்படிப்பு என்றால் தர மதிப்பெண், பணி செய்யும்போது மதிப்பீட்டு வரிசை இப்படி எண்ணின் முக்கியத்துவம் வாழ்க்கை முழுவதும் நீள்கிறது. நடுத்தர வயதைத் தாண்டினால் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, கொழுப்பின் அளவு, உடல் எடை, உயரம் போன்று ஆரோக்கியம் சார்ந்த சோதனைகளிலும் எண்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
இதேபோல் ஒவ்வொருவருடைய இதயத்துக்கும் ஓர் எண் மதிப்பீடு உண்டு. இதனை E.F என்கிறார்கள். இந்த EF எண் ஒருவருடைய ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான குறியீடு என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதயநோய் சிறப்பு மருத்துவரான கார்த்திகேசனிடம் EF நம்பர் பற்றிக் கேட்டோம்...
EF நம்பர் என்பது என்ன?
‘‘ஒவ்வோர் இதயத்துடிப்பின்போதும் உங்கள் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் ரத்த சதவீதத்தின் அளவீடே இந்த Ejection Fraction நம்பர். உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலைத் தரக்கூடிய ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்லும் வேலையை இதயம் செய்கிறது. இதற்கு இதயத்திற்கு தன்னுள் வரக்கூடிய ரத்தத்தை உந்தும் சக்தி தேவைப்படுகிறது. அந்த உந்தும் சக்தியை அளவிடும் எண் இது.
ஒருவருக்கு ஆரோக்கியமான இதயம் எனில், ஒவ்வொரு துடிப்பிலும் ரத்த உந்துசக்தியின் அளவானது 50 முதல் 75 சதவீதமாக இருக்கும். 50 சதவீதத்திற்கு கீழ் இருந்தால், அவரின் இதயத்திற்கு, உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் போதுமான ரத்தத்தை வெளியேற்றும் உந்துசக்தி இல்லை என கொள்ளலாம்.’’
எவ்வாறு அளவிடப்படுகிறது?
‘‘எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram) உதவியுடன் EF நம்பர் அளவிடப்படுகிறது. மிகச்சாதாரணமான, வலியில்லாத இந்த சோதனையில் ஒலி அலைகளை(Ultrasound) இதயத்திற்கு அருகில் செலுத்தி உந்து சக்தியை அளவிடுகிறார்கள். இதைத்தவிர, உங்கள் உடல்நிலைக்கேற்ற பிற சோதனைகளையும் மருத்துவர் மேற்கொள்வார். உங்களின் EF நம்பர் தெரிந்தவுடன், இதய ஆரோக்கியத்தைப்பற்றிய அனைத்து சந்தேகங்களையும் உங்களுடைய மருத்துவரிடம் அவசியம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.’’
எது ஆரோக்கியமான அளவு?
‘‘50 - 75 சதவீதம் என்பது நார்மல். இது ஆரோக்கியமான இதயம் சாதாரணமாக உந்துசக்தியோடு, உடல் மற்றும் மூளைக்குத் தேவையான அளவு ரத்தத்தை வழங்க முடியும். EF நம்பர் 36-49 சதவீதமாக இருக்குமானால் அது நார்மலுக்கும் சற்று குறைவு. (Below Normal). உடலின் தேவையைப்பூர்த்தி செய்யக்கூடிய அளவில் இதயத்திற்கு போதுமான உந்துசக்தி இல்லை என்பதை குறிப்பது. 35 சதவீதத்திற்கும் குறைவான EF நம்பர் இருக்குமானால், இதயம் போதுமான உந்துசக்தி இல்லாமல், வலுவிழந்து இருப்பதை குறிக்கும். இந்நிலைதான் தீடீர் இதய செயலிழப்பிற்கு கொண்டுவிடும்.’’
EF நம்பர் குறைவதற்கான காரணங்கள்...
‘‘இதயத் தசைகள் வலுவிழந்து அல்லது பழுதடைந்த நிலையில் இருந்தால் EF நம்பர் குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கும், மூளைக்கும் தேவைப்படும் ரத்தத்தை சாதாரணமாக எடுத்துச்செல்லும் வேலையை இதயத்தால் செய்ய முடியாது. நீண்டநாள் சிகிச்சையளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய வால்வு நோய், மாரடைப்பு, நோய்த்தொற்றுகள் மற்றும் பராமரிக்கப்படாத சீரற்ற ரத்த சர்க்கரை அளவு போன்ற காரணங்களால் இதயத் தசைகள் பழுதடைகின்றன.
மேலும், ரத்த ஓட்டம் குறைவாக உள்ள நிலையில் உடலானது அதை ஈடு செய்ய முயற்சி செய்ய முற்படும்போது, உடல் சோர்வு, மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த நிலையை இதய செயலிழப்பு என்கிறோம். இதய செயலிழப்பு ஏற்படும் பலருக்கும் EF நம்பர் குறைவாக இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.’’
குறைந்த EF நம்பர் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
‘‘இதயம், மோசமான உந்துசக்தி உள்ளதாக இருந்தால், பல கடுமையான அபாயங்கள் நேரிடலாம். அதிவேக அல்லது மிகக்குறைவான வேகத்தில் இதயத்துடிப்புகள் ஏற்படும். இதுபோன்ற சீரற்ற இதயத்துடிப்பினால், திடீர் மாரடைப்பு (SCA Sudden Cardiac Arrest) நிகழக்கூடும். இந்தத் தருணத்தில் இதயம் ரத்தத்தை உந்துவதற்குப் பதிலாக, தாறுமாறாக துடிக்க ஆரம்பித்துவிடும். இது மிக அபாயகரமான நிலை. இதனால் உயிரிழப்பு அபாயமும் ஏற்படலாம்.
அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் தோளுக்கு அருகில் துளையிட்டு, Implant Cardioverter Defibrillator (ICD) பொருத்தி விடுவோம். பம்ப் ரேட் குறையும்போது, இது தானாகவே ரத்தத்தை பம்ப் செய்யும் பணியை செய்துவிடும். 35 சதவீதத்திற்கும் குறைவான EF நம்பர் இருப்பவர்களுக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்படுவதை மருத்துவ ஆய்வு நிரூபிக்கிறது.
இவர்களுக்கு உந்துசக்தியை அதிகரிப்பதற்கான உபகரணங்கள் சிகிச்சையை (Device Therapy) ஆரம்பிக்க வேண்டும். இதயத்துடிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறதோ அதேபோல் இதய உந்துசக்தியை அதிகரிக்கச் செய்வதற்கானது ICD உபகரணம்!’’எந்த மாதிரியான உடல்நிலையில் EF சோதனையை மேற்கொள்ள வேண்டும்?
‘‘இதயநோய் வந்தால் மட்டுமே இந்த சோதனையை செய்து கொள்ள வேண்டுமென்பதில்லை. சாதாரணமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்யும்போதே இந்த சோதனையையும் எடுத்துக் கொள்ளலாம். இதயத்துடிப்பை ஒரு ட்ரெட்மில் சோதனையில் தெரிந்த கொள்வதைப் போலவே எக்கோ கார்டியோகிராம் சோதனையில் இதய உந்துசக்தியை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு இதய சம்பந்தமான பிரச்னை ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக EF நம்பரை சோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை அளவு, உயர்ரத்த அளவு போன்றவற்றை சீராக வைத்திருப்பதைப் போலவே EF நம்பரை சீராக பராமரிப்பதும் அவசியம் என்பதால் அடிக்கடி சோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.’’
- என்.ஹரிஹரன்
Post a Comment