நாமல் குமார, மகிந்தவுடன் நெருங்கிப் பழகினாரா..?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக தற்போது சர்ச்சைக்குரிய செய்தியை உருவாக்கியுள்ள நாமல் குமார என்ற நபர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கி பழகியவர் என்பதுடன் தங்காலையில் உள்ள கார்ல்டன் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரக்காபொலயில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெறும் வைபவத்திற்கு வருகை தருமாறு, நாமல் குமார, பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இது குறித்து நாமல் குமார கருத்து வெளியிடுகையில்,
தங்காலையில் உள்ள கார்ல்ட்ன வீட்டுக்கு சென்று மகிந்த ராஜபக்சவிடம் அழைப்பை விடுத்ததாகவும் அவருக்கு இருக்கும் பணிச் சுமைகள் காரணமாக அவர், சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனவும் இதன் காரணமாக விகாரையில் நடைபெறவிருந்த வைபவத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலைமையில் நாமல் குமார என்ற நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பகடைக்காயாக இருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இது சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment