இராவணன் இலங்கையன் அல்ல - அடித்துக்கூறும் சுப்பிரமணியன் சுவாமி
இராவணன், நொய்டாவில் பிறந்தவர் என்றும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறி வந்தது போல் அவர் திராவிடன் அல்ல என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆரியர்_ -திராவிடர் எனும் கருத்து இந்தியர்கள் மனதில் ஆங்கிலேயரால் விதைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இராமாயணத்தில் இராமனின் மனைவியான சீதையைக் கடத்தியதால் அவருக்கு எதிரியானவர் இராவணன். அரக்கனான இராவணன் கொல்லப்பட்ட தினத்தை வட இந்தியாவில் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், தசரா பண்டிகையின் இறுதியிலும் இராவணனின் கொடும்பாவியை எரித்து வட இந்தியர்கள் மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்றுமுன்தினம் கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே 'இந்திய பாரம்பரியக் கலாசாரம் மற்றும் அதன் முக்கியத்துவம்' எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அதில் அவர், "இராவணன் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிஷ்ரக் கிராமத்தில் பிறந்தவர்" எனக் கூறினார். இராமாயணத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்படும் இராவணன், இலங்கையில் பிறந்தவர் என்ற பிரதான கருத்தை சுவாமி மறுத்தார்.
"கருணாநிதி கூறிவந்தது போல் இராவணன் ஒரு திராவிடன் அல்ல, ஆரியன்" என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "வட இந்தியாவில் பிறந்ததாலும், இராவணனைக் கொன்றதாலும் தென் இந்தியர்களுக்கு இராமன் வெறுக்கத்தக்கவர் ஆகி விட்டார். இராவணன் இலங்கையில் இருந்ததால் அவர் திராவிடன் எனக் கருதப்படுவது உண்மை அல்ல"எனத் தெரிவித்தார்.
மேலும், "இராவணன் சாம வேதம் அறிந்த அறிஞர். ஆனால் இராவணனைத் தன்னைப் போல் எனத் தவறாகக் கருணாநிதி கருதி விட்டார்"என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இது குறித்து தனது உரையில் சுப்பிரமணியன் சுவாமி கூறு ம்போது, "வட இந்தியா ஆரியர்களுக்கானது எனவும், தென் இந்தியர்கள் திராவிடர் என்றும் ஆங்கிலேயர் நம் மனதில் புகுத்தியது தவறான கருத்து. எனவே, நாம் அனைவரும் ஒருவரே என்பது ஏற்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் தம் வரலாற்று நூல்களில் எழுதியது போல் நாம் ஒன்றும் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல"எனத் தெரிவித்தார்.
இந்திய உத்தரப் பிரதேசத்தின் கவுதம்புத் நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் பிஷ்ரக் என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமவாசிகள் இராவணன் அங்கு பிறந்ததாக நம்புகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் அக்கிராமத்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில் வளாகத்தில் இராவணனுக்கு கடந்த வருடம் சிலை வைக்க முயற்சி செய்தனர். இதை எதிர்த்த சிலர் அந்த இராவணன் சிலையை இரவில் உடைத்து அங்கிருந்து அகற்றி விட்டனர்.
இதுகுறித்து கிரேட்டர் நொய்டா பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிலையை உடைத்ததாக அருகிலுள்ள காஜியாபாத்தின் தூதேஷ்வர்நாத் கோயிலின் தலைமைப் பூசாரியான நாராயண் கிரி, பூசாரி கிருஷ்ணா கிரி, சதீஷ் நாகர், ஹரீஷ் சந்திரா நாகர் மற்றும் பசுப் பாதுகாப்பு தள தலைவரான சுரேந்திரா நாத் உட்பட 30 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கான்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் எதிர்ப்புகளை மீறி இராவணனுக்கு கோயில் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
These all myth. Not to worry too much. Jaffna Muslim do not waste your Web space.
ReplyDelete