அரசை கவிழ்க்க, மஹிந்த அணி வகுத்துள்ள 5 திட்டங்கள்
மக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லை, கொழும்பை மக்கள் பிடிக்குள் 12 மணி நேரம் வைத்திருந்தோம். இது வெறும் ஒத்திகை; பாரிய திட்டத்தை பரிசோதித்துப் பார்த்தோம். 'நாம் செய்தது அஹிம்சையான போராட்டமே' என்று கூறுகிறார்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும
கேள்வி: -கூட்டு எதிர்க்கட்சி கடந்த வாரம் நடத்திய எதிர்ப்புப் பேரணி சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடு என்றும், அது முற்றுமுழுதாக தோல்வியில் முடிந்த ஒன்று என்றும் ஐ.தே.கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனரே...
பதில்: -ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூறுவதற்கு வேறு என்ன இருக்கின்றது? முதலில் நாம் எப்.சி.ஐ.டியை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், புதிதாக அமைத்துள்ள நீதிமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள். கொழும்புக்கு மக்கள் வரப் போவதில்லை என்றார்கள். இவ்வாறு பல சிறுபிள்ளைத்தனமான கதைகளை ஐ.தே.கட்சி கூறியது. எனவே எமக்கு இந்த மக்கள் பேரணி வெற்றி தொடர்பான நற்சான்றிதழை ஐக்கிய தேசியக் கட்சியிடம் பெற வேண்டிய தேவை இல்லை. முதலில் நாம் மிகத் தெளிவாகக் கூறுகின்றோம் இந்த நூற்றாண்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டத்திற்கு, எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொழும்பு நகருக்கு வந்த அதிகூடிய மக்கள் கூட்டம் இதுவேயாகும்.
இரண்டாவது விடயம் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட மிக நீண்ட நேரம். மூன்றாவது விடயம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் அதிகளவில் பயந்தது என்றால் அது இந்த ஆர்ப்பாட்டமாக இருந்ததேயாகும். இவ்விடயங்கள் மிகத் தெளிவானவை. மற்றதொரு சிறப்பான விடயம் என்னவெனில் தலைநகர் மக்களின் பிடிக்குள் 12 மணி நேரம் இருந்த பலமான ஆர்ப்பாட்டம் இதுவாக இருந்ததாகும்.
கேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் தெரிவு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனரே...
பதில்: - இந்தக் கதைக்கு அடைப்புக்குறிக்குள் 'சபையின் சிரிப்பு' என எழுதுங்கள். பாராளுமன்ற அறிக்கையினை அறிக்கையிடுவதைப் போன்று இது அந்தளவுக்கு நகைச்சுவைக் கதையாகும். நாம் அவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம், இவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கு முன்னர் சிலர் கூறினார்கள். அவ்வாறு பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்க முனைந்தவர்கள் மக்கள் கூட்டம் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தைத் தெரிவு செய்ததாக இப்போது கூறுகின்றனர். உண்மையிலேயே இது ஒரு நகைச்சுவைக் கதை என நான் கூறுவது அதனாலாகும். இதில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தை மக்கள் கண்டார்கள். பாரிய மக்கள் அணியுடன் நாம் இணைந்து அஹிம்சைப் போராட்டத்தையே முன்னெடுத்தோம். எந்த போராட்டத்தைச் செய்யவுமில்லை, எந்த அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தவோ, அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களது அலுவலகங்களை முற்றுகையிட்டு சேதப்படுத்தவுமில்லை. மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டமும் இருக்கவில்லை. எனினும் நாம் அரசாங்கத்தின் திட்டங்கள், அரசாங்க அதிகாரிகளின் மற்றும் அரசாங்கத்தின் அச்சத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்கு அநேகமான தந்திரங்களைக் கையாண்டோம். எனவே அரசாங்கம் அதனுள் சிக்கிக் கொண்டது. இது வெறும் ஒத்திகை மாத்திரமே என்பதை நாம் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்கின்றோம். பாரியதொரு திட்டத்திற்கான வெறும் சோதித்துப் பார்க்கும் வேலையினை மாத்திரமே செய்ேதாம்.
கேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் எனக் கூறினீர்கள். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையே...
பதில்: - அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துச் சென்று கடையில் உப்பு ஒரு கிலோ வாங்குவதைப் போன்று இலகுவான விடயமல்ல. பல கட்டங்களாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதில் முதல் கட்டமாக நாம் அரசாங்கத்திலிருந்த 342 உள்ளூராட்சி மன்றங்களில் 247 ஐக் கைப்பற்றியிருக்கின்றோம். அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாம் அரசாங்கத்தை அவுட் ஆக்கியிருக்கின்றோம். இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை இல்லாமல் செய்திருக்கின்றோம். மூன்றாவது கட்டமாக நாம் மக்கள் எதிர்ப்பு பேரணியின் ஊடாக தலைநகரைக் கைப்பற்றி மக்களின் பலத்தை முழு உலகிற்கும் காட்டியிருக்கின்றோம். இதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ள அதிகாரம், அரசாங்கத்திற்கு இருக்கும் எதிர்ப்பு என்பவற்றை மிகத் தெளிவாகக் காட்டினோம். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாம் ஐந்து கட்டங்களைத் திட்டமிட்டிருக்கின்றோம். அவற்றுள் மூன்றாவது கட்டத்தையே சில தினங்களுக்கு முன்னர் செயற்படுத்தினோம். மக்கள் ஜனாதிபதியை, பிரதமரை, பொலிஸ் மா அதிபரை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியில் இறங்க முடியாதவாறு நகரை முற்றுகையிட்டார்கள். அதனை அஹிம்சை மற்றும் அமைதியான முறையிலுமே மக்கள் செய்தார்கள். எங்கும் சிறு கல்லைக் கூட எறிந்து சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன என்ற சிறிய சம்பவத்தையாவது கேள்விப் பட்டீர்களா?மக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களா? எந்தவித கலவரங்களும் இல்லாமல் மிகவும் ஜனநாயக முறையில் நகரை முற்றுகையிட்டதே இதன் சிறப்பாகும். மிகவும் அமைதியான முறையில் இதனை நாம் செய்தோம். எம்மை நோக்கி விரலை நீட்டுமளவுக்கு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை.
கேள்வி: - மக்கள் எதிர்ப்புப் பேரணிக்காக வந்தவர்கள் வீதியில் தவித்திருக்கும் போது உங்களது குழுவினர் நட்சத்திர ஹோட்டல்களில் இரவைக் கழித்தார்கள் எனக் கூறப்படுவது உண்மையா?
பதில்: - அது ஊடக அமைச்சரின் கொபேல் கோட்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட கதையே. இது நாம் முற்றாக ஒதுக்கும் குற்றச்சாட்டு. நாம் மக்களோடு நடுவீதியில் அமர்ந்திருந்தோம்.ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாலுள்ள வீதியில் அமர்ந்திருந்தது அரசாங்கத் தரப்பினருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நாம் இருப்பதாகத் தெரிந்திருக்கும் போல.
கேள்வி: - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம் என உங்கள் அணியில் உள்ளவர்கள் கூறினாலும் அது நகைச்சுவையான கதை என்றே அமைச்சர்கள் கூறுகின்றனர்...
பதில்: - இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களைப் போன்று இந்நாட்டில் நகைச்சுவை வழங்கும் வேறு ஆட்களும் உள்ளார்களா? அதனால்தான் நாமும் நகைச்சுவைகளை வழங்குவதாக அவர்கள் நினைக்கின்றார்கள். நாம் சந்தேகமின்றி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
கேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் ஒரு இலட்சம் பேரே கொழும்பிற்கு வந்தார்கள். அந்த ஒரு இலட்சமும் வந்தது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே தவிர கொள்கையினைப் பாதுகாப்பதற்கல்ல என கூறுகின்றார்கள். ஒரு இலட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வந்ததால் மாத்திரம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது. அதன் மூலம் மொத்த மக்களின் விருப்பம் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனரே...
பதில்: - இதனைக் கூறுவது துக்கத்தில் கூறப்படும் கவிதை என்று. முடிந்தால் இதனை விட அதிக மக்கள் கூட்டத்தைக் கொழும்புக்கு அழைத்து வந்து காட்டுங்கள் என நான் சவால் விடுகின்றேன்.அரசாங்கத்தால் முடிந்தால் எம்மை விட அதிக கூட்டத்தை அழைத்து வந்து காட்டட்டும். அரசாங்கத்தினால் அப்படிச் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.
கேள்வி: - கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதியின் தோளிலேயே தொங்க முனைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: - சில நேரம் அதில் உண்மை இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற தேசிய தலைமைத்துவம் எமது வாழ்நாளில் உருவாகவில்லை. அவரைப் போன்ற வெற்றிகரமான தலைமை எமது வாழ்நாள் முழுவதிலும் உருவாகவில்லை. அரசியல் கட்சியிலோ நாட்டிலோ அவரைப் போன்ற தலைவர் இரண்டு மூன்று தசாப்தங்களிலும் உருவாகவில்லை. அவ்வாறான தலைவரோடு ஒன்றாகப் பயணிப்பதற்கு, அந்த தலைவரின் கீழ் பாதுகாப்பை பெறுவதற்கு அந்த வழியைத் தெரிந்த ஏராளமானவர்கள் இருக்க முடியும்.
சுபத்ரா தேசப்பிரிய தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
Post a Comment