Header Ads



49 நாள்கள் திக்குத்தெரியாமல், கடலில் மிதந்த இளைஞன்


இந்தோனீசிய இளைஞர் ஒருவர் நாற்பத்து ஒன்பது நாள்கள் கடலில் திக்கு தெரியாமல் தவித்து மீண்டிருக்கிறார். ஒரு மீன்பிடி குடிசையில் கடல் நீரை குடித்து, தனது குடிசை படகில் இருந்து மரக்கட்டைகளை பயன்படுத்தி கடல் மீன்களை உண்டு இவ்வளவு நாள்கள் தாக்குப்பிடித்திருக்கிறார்.

இந்தோனீசிய கடல் பகுதியில் இருந்து 77 மைல் (125 கிமி) தொலைவில் ஒரு மீன்பிடி குடிசையில் அல்டி நோவல் அடிலங் இருந்துவந்தார். கடந்த ஜூலை மாதம் கடுமையான சூறாவளி காற்று காரணமாக 19 வயது இளைஞர் அடிலங் திக்குதெரியாதநிலையில் குவாம் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டார்.

பனாமா கப்பல் ஒன்று மூலமாக அவர் மீட்கப்பட்டார். இந்தோனீசியாவின் சுலாவெசி தீவைச் சேர்ந்த அந்த பத்தொன்பது வயது இளைஞர் 'ராம்பாங்' எனப்படும் துடுப்புகளற்ற, எந்திரம் இல்லாத ஒரு மிதவை மீன்பிடி குடிசையில் வேலை செய்துவந்தார்.

ராம்பாங் விளக்குகளை போடுவதன் மூலம் மீன்களை வலையில் வீழ்த்தும் வேலைதான் அல்டி நோவல் அடிலங்கின் பணி என்கிறது ஜகார்டா போஸ்ட் செய்தித்தாளின் அறிக்கைகள்.

ஒவ்வொருவாரமும் அம்மீன்பிடி குடிசைக்குச் சொந்தக்காரர் தனது நிறுவனத்தின் ஒரு வேலையாள் மூலம் அடிலங்கிற்கு உணவு, தண்ணீர், மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்கிவிட்டு, மிதவை மீன்படி குடிசையில் சிக்கிய மீன்களை பெற்றுக்கொள்வார்.

'அடிக்கடி அழுத அடிலங்'
கடந்த ஜூலை 14-ம் நாள் அடிலங்கின் ’ராம்பாங்’ கடுமையான சூறாவளி காற்றின் தாக்குதலில் சிக்கியது. அப்போது அவரிடம் உணவுப்பொருள்கள் ஓரளவுதான் இருந்தது. ஆகவே அவர் மீன்பிடித்து தனது மீன்பிடி குடிசையின் மர வேலியில் இருந்து மரக்கட்டைகளை எடுத்து மீன்களை சுட்டுச் சாப்பிட்டார்.

தி ஜகார்ட்டா போஸ்ட் நாளிதழலானது திக்கில்லாமல் குடிசை மிதந்ததால் அடிலங் பயந்துவிட்டதாகவும் அடிக்கடி அழுது கொண்டிருந்ததாகவும் ஒசாகாவில் இந்தோனீசிய தூதுவர் ஃபஜர் ஃபர்தாஸ் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

''ஒவ்வொரு முறை அவர் ஓரு பெரிய கப்பலை பார்க்கும்போதும் அவருக்கு தான் காப்பாற்றப்படுவோம் என நம்பிக்கை பிறந்தது. ஆனால் பத்துக்கும் அதிகமான பெருங்கப்பல் அவரை கடந்து சென்றன. ஆனால் எவரும் அவரை பார்க்கவில்லை அல்லது கப்பலை நிறுத்தவில்லை'' என ஃபஜர் ஃபர்தாஸ் கூறியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தனக்கு அருகில் இருந்த எம்வி அர்பெக்கியோ கப்பலை பார்த்ததும் அடிலங் ஒரு அவசரநிலை செய்தியை ரேடியோ சமிக்ஞை மூலமாக அனுப்பினார். குவாம் தீவின் கடல் பகுதியில் இருந்த ஒரு பனாமா கப்பல் அந்த அழைப்பை எடுத்தது.

அக்கப்பலின் கேப்டன் குவாம் கடற்கறை பாதுகாப்பு அதிகாரியை தொடர்புகொண்டார். அவர் ஒரு குழுவை அனுப்பி அவரை மீட்டு ஜப்பானுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார் என்கிறது ஒசாகாவின் இந்தோனீசிய தூதரக ஜெனெரலின் பேஸ்புக் பக்கம்.

அடிலங் செப்டம்பர் ஆறாம் தேதி ஜப்பானை அடைந்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் இந்தோனீசியாவுக்கு பறந்தார். தற்போது தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் அந்த 19 வயது இளைஞர்.

1 comment:

  1. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்;

    (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்;

    பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்;

    அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.

    (அல்குர்ஆன் : 10:22)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.