அம்பாறை பள்ளிவாசல் சேதம் 27 மில்லியன், 1 மில்லியனை வழங்கி ஏமாற்றியது நல்லாட்சி
கடந்த பெப்ரவரி மாதம் அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் முழுமையாக சேதங்களுக்குள்ளான அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நஷ்டம் 27 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்ட போதிலும் ஒரு மில்லியன் ரூபாவே நஷ்டஈடாக வழங்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நஷ்டம் 27 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அத்தொகை நஷ்டஈடாக வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு ஒரு மில்லியன் ரூபாவை நஷ்டஈடு வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலின் நஷ்டஈடு மதிப்பீட்டுத் தொகையான 27 மில்லியன் ரூபாவை தாமதியாது வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் முதலாம் வாரம் புனர்வாழ்வு அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் தலைமையில் கண்டி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் தனியார் சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் தாமதமாகின்றமை தொடர்பில அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினர்.
இச்சந்தர்ப்பத்திலே அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றினைத் தயாரித்து அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுமாறு புனர்வாழ்வு அதிகார சபைக்குப் பிரதமர் பணிப்புரை விடுத்தார். கூட்டத்தில் புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். என்றாலும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் நிலவுவதாகவும் சில அமைச்சர்கள் தாமதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபாவே நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
1987 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின்படி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் நஷ்ட மதிப்பீட்டில் 20 வீதமே நஷ்டஈடாக வழங்க முடியும். அத்தோடு பள்ளிவாசல்களுக்கு நஷ்டஈடாக ஒரு மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட தொகையே வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட 13 சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இவற்றில் பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நஷ்டம் 27 மில்லியன் ரூபாவெனவும் ஏனைய சொத்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் 3.5 மில்லியன் ரூபாவெனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ARA.Fareel
Post a Comment