Header Ads



சிங்களவர்கள் அலைமோத, முஸ்லிம்களின் கவனம் குவிக்கப்படாத சர்வதேச புத்தகக் கண்காட்சி 2018

வருடா வருடம் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சி இலங்கை BMICH இல் 21.09.2018 முதல் ஆரம்பமாகியுள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபு உள்ளிட்ட மொழிகளைத் தாண்டி பல சர்வதேச மொழி புத்தகங்களும் வருடா வருடம் விற்பனைக்கு விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் பல மொழிகளிலான புத்தகங்கள் விற்பனைக்கு வரவிருப்பதாக ஏற்பாட்டுக்குழுவினர் விளம்பரம் செய்து வருகிறார்கள்.  இலங்கையின் தலை சிறந்த சிங்கள, தமிழ், ஆங்கில மொழி பதிப்பகத்தினரும் தங்கள் வெளியீடுகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தும் அதே நேரம். சர்வதேச பதிப்பகங்களும் தமது வெளியீடுகளை விற்பனை செய்கின்றன. 

வாசிப்பு - வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும்.

வாசிப்பு என்பது இன்று பெரும்பாலும் கணிணி மயப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறிவிட்ட காலத்தை நாம் அடைந்திருக்கிறோம்.  புத்தகங்களை நேசித்து, வாசித்து பயனடைந்தது தாண்டி, மின்னனு சாதனங்களில் கிடைப்பதை பகிறுதலே பெரும் பணியாக தற்போது மாறியுள்ளது. 

வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலை தளங்கள் நம்மை ஆக்கிரமித்து விட்ட இந்த காலத்தில், வீடியோக்களும், ஆடியோக்களுமே அறிவுகளாக பார்க்கப்படுவது அறிவு வரட்சியின் உச்சம் என்பதை தாண்டி ஒன்றுமில்லை.  சமூக வலை தளங்களில் கிறுக்குவது கூட பெரும் எழுத்தாற்றலாகவும், காரணமே இல்லாமல் கருத்து சொல்வது அறிவின் முதிர்ச்சியாகவும் பார்க்கப்படும் நிலை எப்படி அறிவு வளச்சியாக மாறும்?

முஸ்லிம் சமூகத்தின் வாசிப்பு வீதம்.

உலக அளவில் அதிக வாசிப்பு வீதம் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒரு முக்கிய இடத்தை கொண்டுள்ளது. இந்த கணிப்பீடு சமுதாய வளர்ச்சி வீதத்துடனான கணிப்பீடாகும். அந்த வகையில் முஸ்லிம் சமுதாயம் மெச்சிக்கொள்ளும் வகையில் நமது வாசிப்பு வீதம் இல்லையென்பதே உண்மையாகும். 

இலங்கை சமூகத்தின் எழுத்து, வாசிப்பு வீதம்.

இலங்­கையின் எழுத்­த­றிவு வீதம் 92 ஆகும். ஆண்கள் 93%, பெண்கள் 91%. ஆண்களுக்கும் பெண்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வித்­தி­யாசம் 1.9%. இலங்கை எழுத்தறிவில் சர்­வ­தேச அளவில் 83 ஆவது இடத்தில் இருக்­கின்­றது.  82 ஆவது இடத்தில் மியன்­மாரும் 84 ஆவது இடத்தில் கொஸோ­வாவும் உள்­ளன. இலங்கையின் நிலை உலகச் சரா­ச­ரி­யிலும் பிராந்திய சராசரியிலும் மேம்பட்டதாகும். இது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். உலகச் சராசரி 86% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசி­யா­வி­லேயே மிக மோச­மான எழுத்­த­றிவு வீதம் இந்­தி­யா­வுக்­கு­ரி­யது. எழுத்தறிவற்றோரின் தொகை 287 மில்­லியன். இதிலும் பெண்­களின் தொகையே அதிகமாகும். உலக எழுத்­த­றி­வற்றோர் தொகையில் இது 37% என “ஒக்ஸ்பாம் (OXFAM)” நிறு­வ­னத்­தகவல் தெரிவிக்கின்றது.  ஏற்றத் தாழ்­வான சமூக, பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் பாரம்­ப­ரிய பழக்க வழக்கங்கள், மூட நம்­பிக்­கைகள் ஆகி­யன இதற்குக் கார­ண­மா­கலாம். வல்­ல­ரசு நிலையில் வளர்ந்து வரு­வ­தாகச் சொல்லப்படும் இந்­தியா எழுத்­த­றிவில் இந்த நிலையில் இருப்­பது வியப்­புக்­கு­ரி­ய­துதான்.

வீட்டில் புத்­த­கங்கள் இருப்­பது தந்­தையின் கல்­வித்­த­ரத்தைப் போல் இரு மடங்கு முக்கியமா­ன­தாகும். குறை­வான எழுத்தறிவுடைய பெற்­றோர்­களின் குழந்தைகள் வாசிப்பில் மோச­மாக இருப்பதற்கு 72% ஆன வாய்ப்பு இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அறிவு வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க ஐந்து முதல் ஆறு வய­தி­ன­ரான குழந்­தைகள் 2,500 முதல் 5,000 சொற்கள் வரை தெரிந்து வைத்­தி­ருத்தல் வேண்டும். (வீரகேசரி) அறிவை வளர்க்க, சமூக மட்ட பிரச்சினைகளை தீர்க்க, தேசிய, சர்வதேச போங்குகளை புரிந்து கொள்ளவென வாசிப்பு அனைத்துக்கும் இன்றியமையாத ஒன்றாகும். வாசிப்பை ஊக்குவிக்கவும், புதிய வாசகர்களை உருவாக்கவும் சமூக அக்கறை கொண்டோரின் முக்கிய முயற்சிகளில் ஒன்றே சர்வதேச புத்தக கண்காட்சியாகும். சென்னை புத்தக கண்காட்சியுடன் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள பாரிய வித்தியாசம் கொழும்பு புத்தக கண்காட்சியின் நிலையாகும். 

புத்தக நிலையங்கள், பதிப்பகங்கள், புத்தகங்களின் புது வரவுகள் என எல்லா தரப்பிலும் இலங்கை புத்தக கண்காட்சியில் குறைகள் இருந்தாலும் இலங்கை மட்ட வாசகர்களுடன் ஒப்பிடும் போது இதுவே பெரும் புரட்சியெனலாம்.  குறிப்பாக சிங்கள, ஆங்கில மொழி புத்தகங்களுக்கு குறைவில்லாத நிலை சிங்கள, ஆங்கில புத்தக வாசகர்களை திருப்திகொள்ளவே செய்யும். 

அறிவியல், சர்வதேச, தேசிய அரசியல், விளையாட்டு, ஆய்வுகள், உளவியல், மருத்துவம் என சிங்கள, ஆங்கில மொழி நூல்கள் ஆக்கிரமிப்பு செலுத்தினாலும் தமிழ் மொழியில் இவற்றை நிவர்த்திக்கும் நிலை போதியளவு இல்லை என்பதே உண்மை. இலங்கை தமிழ்  புத்தக பதிப்பகங்களை பொருத்தமட்டில் பொது அறிவுசார் புத்தகங்களின் பதிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பாடசாலை மேலதிக வகுப்புசார் புத்தகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அபரிமிதமானது. பொது அறிவுசார் நூல்களின் விற்பனையை விஞ்சிய வேகம் மேற்கண்ட நூல்களுக்கு இருப்பதே இதற்க்கான பிரதான காரணமாகும். 

வியாபார நோக்கம் கொண்ட பதிப்பகங்களானாலும் வியாபார நோக்கத்தையும் அறிவை கொண்டு சேர்க்கும் நோக்கத்தையும் ஒன்றாக சேர்ந்து செய்தால் இரட்டை நன்மை உண்டாக்க முடியும். ஆனால் அது இலங்கை பதிப்பகங்களிடம் சாத்தியமாக பல்லாண்டுகள் இன்னும் தேவைப்படும்.  இஸ்லாமிய புத்தகங்களை பதிப்பித்தல் செய்யும் ஒரு சில பதிப்பகங்கள் கூட விற்பனை ரீதியிலான மேலதிக வகுப்பு புத்தகங்கள், அப்பியாச கொப்பிகளையே புத்தக கண்காட்சியிலும் முன்னிலைப்படுத்துகின்றனவே தவிற பொதுவான அறிவுசார் நூல்களுக்கு அவர்களிடமும் இடமில்லை என்பதே கவலையான விஷயமாகும். 

மிகப்பெரிய ஆறுதலாக கிழக்கு பதிப்பகம் போன்ற சில இந்திய முன்னனி பதிப்பகங்கள் புத்தக கண்காட்சியின் முக்கிய புத்தகங்களின் தேவையை நிறைவேற்றுகின்றன என்பது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.  அறிவியல், வரலாறு, இலக்கியம், அரசியல் என பல்துறைசார் நூல்களை அவை கொண்டிருப்பது வரவேற்க்கத்தக்கதாகும்.

பார்வையாளராகவாவது சென்று வாருங்கள்.

புத்தக கண்காட்சி என்பது வாசிப்பு வீதத்தை அதிகரிக்க வைக்கும் முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும்.  பெரும்பான்மை சமுதாய மக்கள் அலை மோதும் நிலையில் இருக்கையில் இலங்கை முஸ்லிம் சமுதாயமோ பெரும்பாலும் இதனை கணக்கிலும் கொள்ளாமை வருந்தமளிக்கும் ஒன்றாகும்.

எந்த மதமும் கொடுக்காத அளவு முக்கியத்துவத்தை அறிவுக்களித்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர்கள் அதன் பெறுமதியை அறியாதிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். விடுமுறை நாட்களை பல்வேறு சுற்றுலாக்களுக்கும் ஒருக்கும் நம் சமுதாயம் புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்காக நேரம் ஒதுக்காமை அறிவு வரட்சியின் உச்சத்தையே வெளிக்காட்டி நிற்கிறது.

வழமை போல் இம்முறையும் நம் சமுதாயம் அறிவுத் தேடலை அசட்டை செய்து கொண்டிருக்கிறது என்பதே வெள்ளிடை மலை. புத்தகம் வாங்குவதற்காக இல்லா விட்டாலும் முதல் கட்டமாக வெறும் பார்வையாளராகவாவது சென்று புத்தகங்களூடான அறிவுத்தேடலின் முக்கியத்துவத்தை உணர முற்பட வேண்டும். அத்துடன் நம் பிள்ளைகளை அழைத்து சென்று பழக்கும் போது எதிர்கால அறிவுத் தேடலை அவர்கள் மேம்படுத்திக் கொள்ள அது பெரும் உதவியா அமைந்து விடும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.

குறிப்பு: 30.09.2018 ஞாயிறு புத்தக கண்காட்சியின் இறுதி நாளாகும். 

ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். 96:03,04,05

-ரஸ்மின் MISc

3 comments:

  1. இதெல்லாம் ஒரு செய்தியா?
    எங்காவது கந்தூரி நடந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  2. Worse literacy rate in Asia is Afghan which is below 35%. India is above 75%.
    Literacy rate of many Muslim nations are still less than 50%. USA and Isreal should consider to develop this.

    ReplyDelete
  3. Turkey literacy rate is 95.6% India literacy rate is 74.04% better USA and Israel should consider to develop India first

    ReplyDelete

Powered by Blogger.