மகிந்தவின் பேரணி புஷ்வானமானது, இதனைவிட 2 மடங்கு மக்களை கொழும்புக்கு அழைப்போம் என சவால்
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி புஷ்வானம் எனவும், விசில் அடித்த அளவுக்கு குத்துக்கரணம் அடிக்கவில்லை எனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியளவு மக்களை அவர்களால் அழைத்து வர முடியவில்லை. ஒரு பேருந்தில் 10 பேர் வரையிலேயே வந்தனர். திட்டம் தோல்வியடைந்துள்ளது. இது நாட்டு மக்கள் அன்புடன் வந்த பயணமல்ல.
ஒரு குடும்பம் ஆட்சியை பிடிக்க வந்த பயணம். கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை சீனாவுக்கு சொந்தமாக விற்பனை செய்தவர்கள் கொழும்பில் கால் பதிக்கவும் உரிமையற்றவர்கள்.
எப்படியான ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் அரசாங்கம் சளைக்காது. அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
2
கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்புக்கு எப்படியான எண்ணிக்கையில் சனத்தை அழைத்து வந்தாலும் தாம் அஞ்சப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதனை விட இரட்டிப்பான மக்களை கொழும்பு அழைத்து வந்து காட்டப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.
அஞ்சல் அலுவலகம் தொடர்பான கட்டளை சட்டத்தின் கீழான அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் இலஞ்சம் கொடுத்து மக்களை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர். சாராயத்தை வழங்கி, கூட்டத்தை காட்டி ஆட்சியை பிடிக்க முடியாது. முன்னாள் ஆட்சியாளர்கள் செய்தவற்றை மக்கள் மறக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச, அனைத்து போயா தினங்களிலும் கனவு காண்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கமே மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எவராலும் முடியாது என ஜே.சீ. அலவத்துவல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment