Header Ads



கிண்ணியாவிலிருந்து சென்ற 10 வயது சிறுமி இலங்கை வருகிறார் - 2 பெண்களை கைது செய்யவும் முடிவு

நாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வித சுற்றிவளைப்பும் முன்னெடுக்கப்படவில்லை. வெகுவிரைவில் போலி முகவர் நிலையங்களுக்கு எதிராக கடும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் 16 வயதுக்கும் குறைந்த கிண்ணியாவைச் சேர்ந்த சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய இரண்டு இலங்கைப் பெண்களையும் கைது செய்வதற்கு துபாய் மற்றும் ஓமானிலுள்ள இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள சிறுமி அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரைக் காலமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் பக்கச்சார்புடனேயே செயற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வெளிநாடு செல்வோருக்காக நடைமுறையிலிருக்கும் குடும்ப பின்னணி அறிக்கையின் காரணமாகவே பல மோசடிகள் இடம்பெற்று வருவதனால் அதனை ரத்துச் செய்யாமல் அதில் சில மாற்றங்களை மட்டும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவை எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து காரணங்களை முன்வைக்கவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கிருந்த ஊழியர்களுடன் குறை நிறைகளை கேட்டறிந்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுடன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்தார்.

ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தையையுடைய தாய் எந்தவொரு தொழில் நிமித்தமும் வெளிநாடு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும் பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்படும் குடும்ப பின்னணி அறிக்கையில் இடம்பெற்று வரும் மோசடி காரணமாகவே இன்று நாம் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குடும்ப பின்னணி அறிக்கையிலிருந்து தப்புவதற்காக இன்று பலர் சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் அவர்கள் சுகயீனமடைந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்தாலோ எம்மால் அவர்களுக்கு உதவ முடியாமலுள்ளது. பணியகத்தில் பதிவு செய்யப்படாமல் சென்று உயிரிழப்போர் வெளிநாடொன்றில் மரணித்தால் அவர்களது சடலத்தைக்கூட எம்மால் நாட்டுக்கு கொண்டு வரமுடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

"இலங்கை பணிப்பெண்கள் 300 அமெரிக்க டொலர் பணத்துக்காக வேறு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. இந்த மனநிலையை பாடசாலை காலத்திலிருந்தே மாற்ற வேண்டும். மாறாக இஸ்ரேல், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட பராமரிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகவே அமைச்சின் கீழ் நாம் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்," என்றும் அமைச்சர் கூறினார்.

வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்கள் தமது தேவையை நிறைவு செய்வதற்காக பல இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டியிருப்பதனால் வேலைகளை இலகுவாக்கும் பொருட்டு அனைத்து செயன்முறைகளையும் தொழில்நுட்பம் அடிப்படையில் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வருடாந்தம் அதிக அந்நிய செலாவணியை நாட்டுக்கு பெற்றுத் தரும் ஒரு இடமாக இருக்கின்றபோதிலும் இதன் செயற்பாடுகள் ஒழுங்கின்றி முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். அதிகாரிகளை பல தடவைகள் எச்சரித்தும் இதன் செயற்பாடுகள் மாற்றியமைக்கப்படவில்லை.எனவே தான் இன்று எவ்வித முன்னறிவித்தலுமின்றி நான் பணியகத்துக்கு திடீர் மேற்பார்வை விஜயமொன்றை முன்னெடுத்தேன். அமைச்சின் தீர்மானத்துக்கு இணங்க செயற்படாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

இதே வேளை கிண்ணியா சிறுமியை பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்பியமை 'ஆட்கடத்தல்' என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை," என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

16 வயதுகூட நிரம்பாத இந்த சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பியது சட்டவிரோதமான செயல். இந்த இரண்டு பெண்களே இச் சிறுமியை அனுப்பியுள்ளனர். இச் செயல் முற்று முழுதா ஒரு ஆட்கடத்தல் சம்பவமே இன்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழில் விசா இன்றி சாதாரண சுற்றுலா விசாவில் துபாய்க்குச் சென்ற சிறுமியை துபாயிலுள்ள பெண், வாகனமொன்றின் மூலம் ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள இன்னுமொரு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

லக்ஷ்மி பரசுராமன்

1 comment:

  1. Tough action should be taken against those involved..

    ReplyDelete

Powered by Blogger.