இலங்கை வீரர்களின் பதக்க, எதிர்பார்ப்புகள் பறிபோயின
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகளின் பல பதக்க எதிர்பார்ப்புகள் நேற்று பறிபோயின. கடற்கரை கரப்பந்தாட்டம், கபடி, மற்றும் நீச்சல் போட்டிகளில் இலங்கை ஏமாற்றம் தந்தது.
எனினும் நீச்சல் போட்டிகளில் இலங்கை நட்சத்திர வீரரான மெத்யூ அபேசிங்க இறுதிப் போட்டிவரை முன்னெறியபோதும் ஏனைய வீரர்கள் ஆரம்ப சுற்றுகளிலேயே தோல்வியை சந்தித்தனர்.
ஜகார்த்தாவிலுள்ள க்ளோனா பன்க் கரோனா நீச்சல் தடாகத்தில் ஐந்தாவது நாளாக நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நேற்றுக் (23) காலை நடைபெற்றன. இதில் இலங்கை அணி சார்பாக மெத்யூ அபேசிங்க, கைல் அபேசிங்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
போட்டியின் ஐந்தாவது தகுதிச் சுற்றின் ஐந்தாவது ஓடுபாதையில் மெத்யூ அபேசிங்க போட்டியிட்டிருந்தார். இதில் ஜப்பான், கொரியா வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த மெத்யூ அபேசிங்க, 49.48 வினாடிகளில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம், 100 மீற்றர் பிரீஸ்டைல் நீச்சல் நான்காவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக போட்டியிட்ட கைல் அபேசிங்க, 50.14 வினாடிகளில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது கைல் அபேசிங்கவின் அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.
இதன்படி, 48 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் மெத்யூ அபேசிங்க 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியதுடன், 13ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கைல் அபேசிங்க, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.
இதேநேரம், நேற்றுக் காலை நடைபெற்ற 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கை வீரர்களான அகலங்க பீரிஸ் மற்றும் சிரந்த டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் மூன்றாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட அகலங்க பீரிஸ், 25.20 வினாடிகளில் போட்டித் தூரத்தை கடந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். குறித்த போட்டிப் பிரிவில் அகலங்க பீரிஸின் அதிசிறந்த காலப்பெறுதியாகவும் இது பதிவாகியது. அதேபோட்டிப் பிரிவின் நான்காவது தகுதிச் சுற்றுல் கலந்துகொண்ட சிரன்ந்த டி சில்வா, போட்டியை 25.36 வினாடிகளில் நிறைவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, 40 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 24ஆவது மற்றும் 25ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தனர்.
இதேவேளை, இலங்கை அணியின் இளம் நீச்சல் வீரரான அகலங்க பீரிஸ் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 2 நிமிடங்களும் 12.14 வினாடிகளில் நிறைவுசெய்த அவர், 6ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனிடையே கபடி போட்டிகளில் ஆறுதல் வெற்றி ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் தமது இறுதி குழுநிலை ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இலங்கை ஆடவர் கபடி அணி 33–22 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.
கபடி போட்டிகளில் ‘ஏ’ பிரிவில்் போட்டியிட்ட இலங்கையின் ஆடவர் கபடி அணி தனது முதல் போட்டியில், நடப்புச் சம்பியன் இந்தியாவிடம் 44–28 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தாலும், உலகின் நான்காவது நிலையில் இருக்கும் தாய்லாந்து கபடி அணியினை தனது இரண்டாவது போட்டியில் 46–29 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருந்தது.
இலங்கை ஆடவர் கபடி அணியின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷ் ஆண்கள் கபடி அணியிடம் 29–25 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
மறுபுறம் இலங்கை கடற்கரை அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்ட கட்டாருடனான போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்து பதக்க வாய்ப்பை இழந்தது.
Post a Comment