கல்முனை இளைஞர்களின் நல்லசெயலும், நீதிபதி றிஸ்வானின் உத்தரவும்...!!
கல்முனையில் கைவிடப்பட்டு தமிழ் இளைஞர்களால் மீட்கப்பட்ட மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூதாட்டி மல்வத்தையை சேர்ந்த வேலுப்பிள்ளை சீனிப்பிள்ளை (வயது 90) என இனங்காணப்பட்டுள்ளார்.
கல்முனை வைத்தியசாலைக்கு முன்பாக சில தினங்களுக்கு முன் (26ஆம் திகதி) குறித்த மூதாட்டியை அவரது பிள்ளைகள் விட்டுச் சென்றுள்ளனர்.
கைவிடப்பட்டு அநாதரவாக கிடந்த மூதாட்டியை கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்கள் மீட்டு உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து மூதாட்டியை முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்களால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார். அதேவேளை குறித்த மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சையளிக்குமாறும், அவரின் பிள்ளைகள் மூவரையும் அடுத்த தவணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மூதாட்டிக்கு உதவிய இளைஞர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
மூதாட்டியை நடுத்தெருவிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தோம். எனினும் முதியோர் இல்லத்தில் அவரை சேர்க்க நீதிமன்றத்தை நாடியபோது பிள்ளைகள் பற்றிய விபரம் தெரியவந்தது.
நாங்கள் மல்வத்தைக்கு சென்று பிள்ளைகளை கண்டு கதைத்தபோது அவர்கள் மூதாட்டியை ஏற்கமறுத்து விட்டனர். அவரை முடிந்தால் வயோதிபர் இல்லத்தில் சேருங்கள் என்று கூறி கடிதமும் தந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் பெண்களை வைத்திருக்கும் இல்லம் இல்லாத காரணத்தினால் நாம் மட்டக்களப்பு தாண்டவன்வெளி இல்லத்திற்கு சென்று பேசினோம்.
பிள்ளைகளிருக்கும் போது அவர்களது சம்மதத்துடன் தான் இல்லத்தில் சேர்க்கலாம் என்றுகூறி அந்த இல்லத்தில் மூதாட்டியை ஏற்க மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு தான் நாம் கல்முனை நீதிமன்றில் பிள்ளைகள் ஆஜராகும் வண்ணம் தாபரிப்பு வழக்கினை தாக்கல் செய்தோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடுத்தெருவில் விடப்பட்ட மூதாட்டிக்காக தமிழ் இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
An amal which is prescribed in Islaam, is clearly practised by Non-Muslims. What a shame!
ReplyDelete