"அரசாங்கத்தின் பிரதான நோக்கம், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே"
மாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் பொது எதிரணியினர் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுவது அரசாங்கத்தின் குறைப்பாடுகளை மூடி மறைப்பதாகும். எல்லை நிர்ணய அறிக்கையினை நாம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துள்ளோம் இதுவொன்றும் புதிதல்ல என தெரிவித்த கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க
அரசாங்கத்தின் பிரதான நோக்கம் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே ஆகவே ஜனவரியில் மாகாண சபை தேர்தல் இடம் பெறும் என்று குறிப்பிடுவது சாத்தியமற்ற விடயம் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொது எதிரயிணின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"மாகாண சபை தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கு பொது எதிரணியினர் இதுவரையில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எம் முறையில் தேர்தலை நடத்தினாலும் தேர்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் அரசாங்கம் தாம் எவ்விதத்தில் தேர்தலை நடத்தினால் தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்று தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றது. புதிய தேர்தல் முறைமையும் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.
புதிய தேர்தல் முறைமை மாறுப்பட்ட தேர்தல் முறைமையாக காணப்பட்டாலும் அது பல நவீன விடயங்களை உள்ளடக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. புதிய தேர்தல் முறைமையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளின் காரணமாகவே பொது எதிரணியினர் இம் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன அரசாங்கத்தின் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவுடன் புதிய தேர்தல் முறைமையினை நிறைவேற்றியது.
இடம் பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளின் பின்னர் அரசாங்கம் புதிய தேர்தல் முறைமைக்கு செல்ல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக எல்லை நிர்ணய ஆனைக்குழுவினை நியமித்தது . ஒரு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரும் முகமாக உருவாக்கிய ஒரு ஆனைக்குழு பிறிதொரு குழு தோன்ற அறிக்கை சமர்ப்பித்துள்ளது. புதிய தேர்தல் முறைமையில் காணப்படுகின்ற பாரிய குறைப்பாடுகளுக்கு அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரும் ஆதரவு வழங்கினார்கள். ஆனால் அவர்களே இன்று புதிய தேர்தல் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தார்மீக உரிமை கிடையாது.
பழைய முறையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மூன்று மாத காலத்திற்குள் தேர்தலை எவ்வித பிரச்சினைகளும் இன்றி திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆனைக்குழு தெரிவிக்கின்றது. ஆனால் இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 23 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். இந்த 29 பேரின் நலன்களுக்காக மாத்திரமே அரசாங்கம் தேர்தலை முறையற்ற விதத்தில் காலம்தாழ்த்தி வருகின்றது.
எல்லை நிர்ணய அறிக்கையினை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தலைமையிலான குழு என்ற காரணத்தினால் குறித்த பரிந்துரைகள் ஸ்ரீ கொதாவிற்கே சாதகமாக காணப்படும். ஆகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை போராட்டங்களின் மத்தியில் பெற்றுக் கொண்டதை போன்றே மாகாண சபை தேர்தலையும் போராட்டங்களின் மத்தியிலே பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.
Post a Comment