இத்லிபில் மனிதப் பேரழிவு ஏற்படும் அபாயம் - எச்சரிக்கிறது துருக்கி, மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்தில்
சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இத்லிப் மாகாணத்தின் மீது அரச படைகள் தாக்குதலை நடத்தும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் சூழலில் ஏற்படவிருக்கும் மனிதாபிமான அவலம் குறித்து அண்டை நாடான துருக்கி எச்சரித்துள்ளது.
சிரியாவில் அரச எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையாக இத்லிப் உள்ளது. இங்கு சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிப்பதோடு இவர்களில் பாதிப்பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாவர்.
இங்கு ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் அரச படை தாக்குதல் தொடுத்தால் சுமார் 2.5 மில்லியன் மக்கள் துருக்கி நாட்டு எல்லைக்கு படையெடுப்பார்கள் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மற்றொரு பாரிய அகதிப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இவ்வாறான ஒரு தாக்குதல் குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுத் கவுசொக்லு கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை தடுப்பதற்காக சிரிய அரசின் கூட்டாளியான ரஷ்யாவுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பயங்கர சூழலுக்கு இத்லிப்பில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.
“எமது நாட்டை விட்டு மீண்டும் நாம் வெளியேற மாட்டோ. இறுதி மூச்சு இருக்கும் வரை எமது மக்களை நாம் பாதுகாப்போம்” என்று இத்லிப் குடியிருப்பாளர் ஒருவரான அஹமது கஜார், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார்.
சிரிய அரசின் தாக்குதல் இங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மிட்டாய் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகிறார். “நாம் இதற்காக ஏன் பயப்பட வேண்டும்? கடந்த ஏழு ஆண்டுகளாக அசாத் ஏற்கனவே எமது குடும்பத்தினர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், குழந்தைகளைக் கூட கொன்றுவிட்டார்” என்றார்.
சிரிய அரச படை ஏற்கனவே கிளர்ச்சியாளர்களை சரணடையும்படி வான் ஊடே இத்லிப்பில் துண்டு பிரசுரங்களை போட்டு வருகிறது.
Post a Comment