யாழில் சாதனை படைத்த முஸ்லீம், ஆசிரிய மாணவனுக்கு சிறப்புக் கெளரவம்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி வரலாற்றிலேயே முதன்முதலாக முஸ்லீம் ஆசிரிய மாணவரொருவர் சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினை காலி மாவட்டத்தின் கிந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் என்பவரே பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் உள்ளகப் பயிற்சி ஆசிரியராகத் தற்போது கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டமையைப் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(06) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் சேகு ராயிதின் தலைமையில்இடம்பெற்றது. கல்லூரிச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் மொஹிடீன் மொஹமட் ஹிமாசுக்குச் சிறப்புக் கெளரவம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கே. எம். நிலாம், கல்லூரியின் அதிபர் சேகு ராயிதின் ஆகியோரால் மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டார். யாழ்.மாநகர சபை உறுப்பினரும்,சமூக சேவையாளருமான எம்.எம்.நிபாஹிர் சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவித்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியால் வழங்கப்பட்ட சிறப்பு விருது யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி- சதாசிவம் அமிர்தலிங்கம் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்ட ஆசிரிய மாணவனை யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம், கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட பலரும் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்களான மானியூர் ரட்ணேஸ்வரன், திருமதி-சுதர்சினி விக்னமோகன் மற்றும் கல்வியியலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment