Header Ads



முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதா என கண்டறிய, உயர்மட்ட குழுவொன்றை நியமியுங்கள்

விடுதலைப்புலிகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிய உயர் மட்ட குழுவொன்றை நியமிக்குமாறு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா, பொது நிர்வாக மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கே. இன்பராசா என்பவர் அண்மையில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமாகே பங்குபற்றிய கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதேவேளை, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னனி அங்கத்தவர் மொஹமட் முஸம்மில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என உடகாவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என். எம். அமீன் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமெனவும், இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படியற்றது என கண்டறியப்படும் பட்சத்தில், குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கே. இன்பராசா மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புவதற்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுடன் இருந்ததுடன் எந்தவித ஆயுத கிளர்ச்சியிலோ வன்முறையிலோ ஈடுபடவில்லை என்பதுடன், முஸ்லிம்கள் தொடர்ந்தும் சமாதானத்துடன் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
  
இவ்வாறான குற்றச்சட்டுகள் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த மேற்கொள்ளும் அரசியல் ரீதியான செயற்பாடு எனவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.