“பேரிடியாய் வந்த, பேராசிரியரின் மரணச் செய்தி"
இன்று -25- காலை பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் திடீர் மரணமடைந்ததாக அறிந்த போது பேரதிர்ச்சியாக இருந்தது.
மர்ஹூம் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களோடு பல வருட காலமாக மிகவுமே நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். சமூக, அரசியல் விடயங்கள் தொடர்பாக அவரது ஆலோசனைகளையும் எப்போதும் பெற்றுக்கொள்ளுவேன். சில வாரங்களுக்கு முன்னர் அவரோடு தொலைபேசியில் உரையாடினேன். முன்தினம் கூட எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக அவரிடம் சில விஷயங்களை பேச நினைத்துக் கொண்டிருந்தேன்.
இந்த சமூகத்திற்கு தனது அறிவாலும், ஆளுமையாலும் பாரிய பங்களிப்பைச் செய்த ஒருவராக பேராசிரியர் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். உண்மையான அர்ப்பணத்துடன் இந்த சமூகத்திற்காக உழைத்தவர் அவர். வட மாகாண முஸ்லிம்களுடைய விடயத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பும், அது ஏற்படுத்திய தாக்கங்களும் நிகரில்லாதவை. முஸ்லீம் சமூகத்தின் சமூக அரசியல் விவகாரங்களை ஆவணப்படுத்தி அறிவு பூர்வமாக முன்வைப்பதிலும் சர்வதேச மயப் படுத்துவதிலும் அவரது பணி மிகவும் தனித்துவமானது. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராகவிருந்து அவர் செய்த சமூகப் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவமிக்கது. இந்த சமூகமும் எதிர் கொண்டிருக்கும் அபாயங்களையும் சவால்களையும் சுயாதீனமாகவும், துணிச்சலாகவும் சுட்டிக்காட்டியவர் அவர்.
நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த காலத்திலிருந்தே அவரோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தேன். நான் அவரோடு மேற்கொண்ட ஒவ்வொரு சந்திப்புக்களும், உரையாடல்களும் இந்த சமூகத்தினதும் நமது மக்களினதும் அபிலாஷைகளையும் மையப்படுத்தியதாகவே இருந்தன. அவரது ஒவ்வொரு வார்த்தைகளிலும், நடவடிக்கைகளிலும் இந்த சமூகம் பற்றிய அவரது நேர்மையான அக்கறையும் கவலையும் பிரதிபலித்ததனையும் நான் நேரடியாகக் கண்டிருக்கின்றேன்.
2002ல் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் தரப்பு ஆலோசனைக்குழுவில் ஒருவராக பேராசிரியர் அவர்களும் உள்வாங்கப்பட்டிருந்தார். முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வின் அடிப்படைகள் எவ்வாறு அமைய வேண்டுமென்ற யோசனைகளை தாய்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் மூலமாகவே நான் சமர்ப்பித்தேன் என்பதும் இப்போது ஞாபகம் வருகின்றது. அவரோடு இணைந்து கருத்தரங்குகள், ஆய்வு ஒன்று கூடல்கள், கூட்டங்களென ஏராளமானவற்றை ஏற்பாடு செய்து , பங்கு பற்றிய அனுபவங்களை இப்போது மீட்டிப் பார்க்கின்றேன்.
எப்போதும் என்னை ‘தம்பி..தம்பி’ என அன்போடு அழைக்கும் அவர் பல விடயங்களிலும் உரிமையோடு எனக்கு ஆலோசனைகளை வழங்குவார்.
‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்பது அனுதாபச் செய்திகளில் பொதுவாகப் பிரயோகிக்கப்படுகின்ற வார்த்தையாக இருந்தாலும் கூட பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் இழப்பின் போதுதான் அந்த வார்த்தைகளின் கனதியை உணர முடிகின்றது. உண்மையிலேயே , பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் இழப்பானது இன்னும் பல தசாப்தங்கள் கடந்தும் ஈடு செய்யப்பட முடியாத ஒன்று என்பதை உணர முடிகிறது.
அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அவரது பணிகள் அனைத்தையும் அங்கீகரித்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவானாக!
அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு பொறுமையையும், ஆறுதலையும் வழங்குவானாக!
அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடருவதற்கும், அவரது இழப்பு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கும் ஏற்ற ஆளுமைகளையும் அல்லாஹ் உருவாக்கித் தருவானாக!!
Post a Comment