பாலியல் குற்றச்சாட்டுக்களால், திணறும் வத்திக்கான்
-றிஸான் சுபைதீன் (நளீமி)
சுமார் 1.3 பில்லியன் மக்கள் அங்கத்தவர்களைக் கொண்டு இறுக்கமான கட்டமைப்புக்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்கம் வத்திக்கானை மையமாக கொண்டு செயற்படும் கிரிஸ்தவத்தின் பிரதான மதப்பிரிவாகும்.
கத்தோலிக்க திருச் சபைகள் பல பரம இரகசியங்களின் உறைவிடம். வெளியுலகம் அறியாத எத்தனையோ விடயங்கள் வத்திக்கானிய சாம்ராஜ்யத்தில் புதைந்து கிடக்கின்றன.
Iஅத்தகைய ஒரு விடயமே இப்போது பெரும் புயலாய் மாறி வத்திக்கானின் கோட்டையை ஒரு குலுக்கு குலுக்கி வருகின்றது.
நீண்ட பல வருடங்களாக கண்டு கொள்ளப்படாமலும் மூடி மறைக்கப்பட்டும் கொண்டிருந்த பாலியல் துஷ்பிரயோகம் சம்மந்தமான விடயங்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல் வெளிவரத் தொடங்கியுள்ளன. போப் பிரான்ஸிசை பதவி விலகுமாறு உயர் தரத்திலிலுள்ள கார்டினல்களே பகிரங்கமாக சொல்லுமளவு நிலமை சென்றுள்ளது.
ஈராயிரம் வருட வரலாற்றைக்கொண்ட கத்தோலிக்கத்தில் இப்படி பகிரங்கமாக போப் ஆண்டவரை பதவி விலகுமாறு மேலிடத்திலிலுள்ளவர்களால் வலியுறுத்தப்படுவது இதுவே முதல் தடவை என சொல்லப்படுகின்றது. இதற்கான பிரதான காரணம் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை போப் பிரான்ஸிஸ் மறைத்துள்ளார் என்பதே.
அதிகமான குற்றச்சாட்டுக்கள் சிறுவர் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை, கன்னியாஸ்திரிகளுடனான தொடர்பு என்ற வகையில் அமைந்துள்ளன. ஆண் சிறுவர்கள் பெண் சிறுமிகள் என்ற வேறுபாடின்றி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3வயது குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள் என்பதே ஆச்சர்யம். பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் 11-14 வயதிற்குட்பட்ட பருவ வயதினர் என்பது கவலையானது.
தேவாலயங்களில் நடக்கும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 1950 களில்தான் முதன் முதலாக செய்திகள் வெளிவரத் தொடங்கி 1990களில் உலகளவில் மிக சீரியசான பேசு பொருளாக இந்த விடயங்கள் மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய துஷ்பிரயோகங்கள் பெரும்பாலான நாடுகளின் தேவாலயங்களில் பரவலாக நடைபெற்றுவந்த போதும் இது தொடர்பிலான வத்திக்கானின் கவனம் குறைவாகவே இருந்து வந்துள்ளது. விடயங்கள் மேலிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டும் அவைகள் மறைக்கப்பட்டுள்ளன. 1950 -2002க்கும் இடைப்பட்ட காலப்பகுதியினுள் 10,666 தனிப்பட்ட நபர்களால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவைகள் அத்தனையும்போல் 18வயதிற்கு கீழ்ப்பட்ட பாதிக்கப்பட்டவர்களாலேயே முன்வைக்கப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
கத்தோலிக்க மதகுருமார்களால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களில் முதலிடத்திலிருக்கும் நாடு அமெரிக்கா.அடுத்தாற்போல் அயர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஒஸ்திரியா என பட்டியல் நீழ்கிறது.
துஷ்பிரயோகம் தொடர்பிலான மிக அண்மைய சில தரவுகள் நிலமை இன்னும் மோசமடைவதனை உணர்த்துகின்றன.
மிக அண்மையில், ஆகஸ்ட் 2018ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா நீதிபதிகள் சபை 1000சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 300க்கு மேலான மதகுருமார்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தது.
அவுஸ்திரேலிய ஆக்கிபிஷப் பிலிப் வில்சன் மற்றொரு மத குருவின் பாலியல் துஷ்பிரயோகங்களை மறைத்தமை தொடர்பில் பதவி விலகியுள்ளார்.
முன்னாள் வத்திக்கானுக்கான தூதுவர் ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஐந்து வருடங்கள் சிறை செய்யப்பட்டுள்ளார்.
சிலி நாட்டில் 30 கத்தோலிக்க மத குருமார் துஷ்பிரயோகம் தொடர்பில் பதவி விலக்கப்பட்டுள்ளனர்.
உலகில் பல மில்லியன் மக்களின் ஆண்மீக வாழ்விலும் அன்றாட வாழ்விலும் வழிகாட்டல்கள் வழங்கும் ஒரு மத நிறுவனம் அடிப்படை ஒழுக்க விதிகளில் அதளபாதாழத்தை நோக்கி மிக வேகமாக வீழ்வது மிக ஆபத்தானது. பொதுவாக நான்கு ஐந்து தசாப்தங்களுக்குள்ளால் கத்தோலிக்கத்தை பின்பற்றுபவர்கள் மத அடையாளத்திற்காகவே தம்மை கத்தோலிக்கர்களாக கருதுகிறார்கள் எனகிறது அயர்லாந்தை மையப்படுத்திய ஆய்வொன்று. மதம் மீதான ஈர்ப்பிலிருந்து வேகமாக அவர்கள் வெளியேறுகிறார்கள். இத்தனைக்குமான பிரதான காரணிகளில் ஒன்று மதம் தன் கடமையிலிருந்து விலகிவிட்டது என்பதுவே.
மனிதன் இயல்பிலேயே பாலியல் உணர்வுகள் கொண்டவன். அவற்றை புறக்கணிப்பது கடவுளை திருப்திபடுத்துவதற்கான வழி என்பது மடமை நிறைந்த சிந்தனை. மனிதனின் கற்பனையின் விழைவாக தோன்றிய இச்சித்தாந்தம் இன்று ஒரு மதத்தின் அடிவேரையே அசைத்துப்பார்க்கின்றது என்பது நிதர்சனம்.காலவோட்டத்தில் மதகுருமார்கள் திருமணம் செய்வதனை கட்டாயமான ஒன்றாகவும் வத்திக்கான் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Post a Comment