Header Ads



"வடபகுதி முஸ்லிம்களின் துயரங்களில், பங்கு கொள்கிறேன்"

- வ.ஐ.ச.ஜெயபாலன்-

கொழும்பு கொள்ளுபிட்டி நூலக அரங்கில் 1994ம் ஆண்டு மெளலவி சுபியான் அவர்கள்  (NMRO) ஒழுங்குசெய்த நிகழ்வில் அழுது அழுது வாசித்த கவிதை. நேற்றுபோல இருக்கிறதெல்லாம். ஆறாவது வருடமும் வருவதே விதியென்றால் அழியட்டும் எனது இனம் என வாசித்ததால் அறம்பாடியதாக பரவலாகக் கண்டிக்கபட்டேன்.

 முஸ்லிம்க்கள் வெளியேற்றபட்டு 6 வருடம் ஆரம்பித்தபோது யாழ்பாணம் விழுந்து முஸ்லிம்கள் கண்ணீருடன் சென்ற பாதையில் தமிழர் செல்ல நேர்ந்தது. இதன்போதும் பலர் என்னை அறம் பாடியதாகத் திட்டினார்கள். இதன்பின் பசீரின் வேண்டுகோளின்பேரில் ஏறாவூர் ஓட்டமாவடி  முஸ்லிம்களின் காணிதொடர்பாகப் பேச படுவான்கரை சென்றபோது என்னை சந்தித்த வன்னியில் இருந்து வந்த  தளபதி சங்கர்/ஈழவேந்தன் முதலில் இந்த தற்செயல் நிகழ்வு  COINCIDENT  பற்றித்தான் குறிப்பிட்டார். அவர்கள் அதீத விடயங்களை நம்புகிறவர்கள். இதனால் நான் பேச்சுவார்த்தை நடத்தப் போன காணிப் பிரச்சினை சிக்கலாகப்போகிறதே என கலங்கினேன். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக “நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர் என தலைவர் சொல்லிவிட்டார். இதற்குமுன் உங்களுக்குத் தீங்கிழைத்த எல்லோரும் இறந்துவிட்டார்கள். அதற்க்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் எங்களை விமர்சிக்கிறது தொடர்பாக இனி தலையீடும் இருக்காது.  ஆனால் விமர்சங்களை எங்களுக்கு அறிக்கையாக தாந்தால் சந்தோசம்” என்றார். ஆச்சரியமாக இருந்ந்தது. அதற்க்கு முதல்நாள் தோழன் எஸ்.எ.எம்.ஹனீபா குழுவினர் சங்கர்/யாழ்வேந்தனைச் சந்திதிருந்தனர்.  தோழன் எஸ்.எ.எம்.ஹனீபாவின் தமிழ் அழகு சங்கர்/யாழ்வேந்தனை மலைக்க வைத்திருந்தது. பேச்சு தமிழின் அழகு பெறுவது கிழக்கில் அதுவும் முஸ்லிம்களிடம் என்று சொன்னேன்.  

வடபகுதி முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேழுங்கள் மீழ வருகிறவர்களை வர்த்தகர்களை  ஆதரியுங்கள். எந்த தொல்லையும் தராதீர்கள். அவர்கள் மீழ்வரவு தீர்மானம் எடுக்கும்வரை பள்ளிவாசல்களையும் வீடுகளையும் பாதுகாருங்கள். அங்கு சிலர் கள்ளச்சாராயம்  காச்சுவதாகத் தகவல் உள்ளது. வீட்டில் குடியேறியுள்ள அகதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுங்கள். என கோரினேன்.  
.
பாதிக்கப்பட்ட வடபகுதிச் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இன்னும் தாயகம் மீழுதல் முழுமையடையவில்லை இன்னும் தடங்கல்கள் உள்ளது  என்கிற சேதிகளில் மனசு நோகுது
.
அழுவதே விதியென்றால்
.................................................

என் தாய் மண்ணின் புதல்வர் புதல்வியரே
தலை பணிந்தேன் சகோதரரே......

அண்ணர்கள் நாங்கள் கொடுமை இழைத்தோம்
உங்கள் மண்ணைப் பறித்தோம்
மாபாதகர்களாய் தொப்புள் கொடி அறுத்து
அன்னை மண் வயிற்றிருந்தும்மை எடுத்தெறிந்தோம்.
அதன் பின்னும் ஐந்து வருடங்கள்
வடக்கில் கொழும்பில்
உலகத்து நாடுகளில்
“நானென்ன தம்பிக்கு காவலா”எனக் கேட்கும்
ஆதாமின் காயினைப் போல்
அருளற்றுப் பேசி வந்தோம்.
இதன் பின்னும் கூட நீங்கள் எம்மை வெறுக்கவில்லை.
ஏதிரி நிலை எடுக்கவில்லை
இன்னமும் எம்மை அண்ணா என நினைக்கிறீர்.

என்ன கொடுமை இழைத்தோம் தமிழர்களே
என்ன கொடுமை நாங்கள் இழைத்துவிட்டோம்.
என்னுடைய வாழ்நாளில்
வடபுலத்து முஸ்லிம் மனிதர்களே உம்போல இன்னுமோர்
மகத்தான இனத்தவரைக் கண்டதில்லை
இதுபோல மான்புடைய உறவுகளை அறிந்ததில்லை
இத்தனைக்குப் பின்னும் ஈழத்தின் குயிலான
என்னை அழைத்து ஒரு பாடல் பாடென்றீர்
எதைப் பாட தோழர்களே எவன் பாடத் தோழியரே
என் கண்ணீரை என் வெட்கத்தை
என் இனத்தின் வரலாற்றுத் தலைகுனிவை
கையாலாகாத
என் போன்ற தமிழ்க் கலைஞர்களின் பேடிமையை
எதைப் பாட தோழர்களே எவன் பாடத் தோழியரே
தவறிழைத்தோம் திருத்துவோம் என்றுலக எதிர்ப்பின் முன்
தலைவர்களே வந்து தலை சாய்த்துச் சொன்ன பின்னும்
இன்னும் சில கலைஞர்

இன்னும் சில அறிஞர்
ஏதேதோ நியாயங்கள்
எடுத்துரைக்கும் கயமைதனை
எதைப் பாட தோழர்களே எவன் பாடத் தோழியரே

இந்துக்கடலாடி எழுந்துவரும் இளவாடை
நீர் சிந்துகின்ற கூந்தல் துவட்டும் வட கரைகளிலே நீங்கள்
நொந்து வடித்த கண்ணீர் 
இதுவரைக்கும் காயவில்லை
அன்றே அகலிகை கல்லான எங்களது மண்ணுக்கு மீண்டும்
நீங்கள் வந்து
மிதிக்கும் வரைவிடிவில்லை
உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக்கன வுகளை
நினைவுப் புதையல்களை
உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை
மண்ணின் மேல் உங்களது மதலைத் தமிழ்
ஏன் மறைந்ததென்று அறியாத அங்கலாய்ப்பில்
உங்களது முன்னோரின்
எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற
ஈமப்புதைகுழிகளை
அவர்கள் உதிரத்தில் செழித்த பழத்தோட்டங்களை
வாழையடிவாழையென உங்கள் தலைமுறைகள் 
“அல்லாஹூ அக்பர்”என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை
எல்லாம் முன்வைத்து
உங்கள் காலடியைத் தொட்டு
மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல்
என் இனத்தின் கைவிலங்கு
ஒருபோதும் ஒடிவதில்லை

பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு
தவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி
தலைவர்கள் வாக்களித்து
வருடங்கள் இரண்டாச்சு
என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா…….

எல்லாம் அபகரித்து
நட்பில்லாச் சூரியனின் கீழ் 
உப்புக்களர் வழியே
ஓடென்று விரட்டி விட்ட
குற்றமெதுவும் அறியா இக்
குணக்குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள்
கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்…..
இன்னும் தமிழர்கள் எல்லோரும் நித்திரையா
இதுதானும் தலைவர்களின் வாக்குறுதி முத்திரையா.

ஆறாம் வருடமும் இவர்கள் 
அழுவதே விதியென்றால்
அழியட்டும் இந்நாடு
அழியட்டும் எனது இனம்
அழியட்டும் என் கவிதை
அழியட்டும் எனது தமிழ்

1994.

1 comment:

  1. வாழ‌ட்டும் ஜெய‌பால‌ன் போன்ற‌ ந‌ல் உள்ள‌ங்க‌ள்.

    ReplyDelete

Powered by Blogger.