ஜனாதிபதி மைத்திரியின், ஒருநாள் செலவு என்ன..?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஒருநாள் செலவுகளை அம்பலப்படுத்த வேண்டுமென வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் இணைப்பு காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
94,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொண்டு மக்கள் சேவைக்கு தம்மை அர்ப்பணிக்கப் போவதாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்த நாட்டின் தலைவர் தற்பொழுது குண்டூசி முதல் விமானம் வரையில் பல்வேறு விடயங்களுக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து கொள்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செலவுகள் குறித்து மைத்திரி ஊடக சந்திப்புக்களில் சுட்டிக்காட்டியதனை மறந்து விட்டார் போலும்.
மைத்திரிபால சிறிசேன தனது அன்றாட செலவுகள் பற்றிய விபரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 40 வீதமானவர்களின் ஒருநாள் வருமானம் 800 ரூபா என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வறான ஓர் நிலையில் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தை 25 வீதத்தினால் உயர்த்துவது நீதியானதல்ல.
மக்களில் பலர் மூன்று வேளையும் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட போது அளித்த வாக்குறுதிகள் தற்பொழுது புதைகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்ட வேண்டும் அவ்வாறு நடத்தினால் மஹிந்த யுகம் மீது மக்கள் கொண்டுள்ள விருப்பம் தெளிவாக புலப்படும் என எஸ்.எம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Post a Comment