Header Ads



ஹஸ்புல்லாஹ்வின் மரணமும், எல்லை நிர்ணய அறிக்கையின் தோல்வியும்

புத்திஜீவியும், புவியியல் துறை பேராசிரியரும், நோர்வே பல்கலைக்கழக சர்வதேச ஆய்வுகளின் முக்கிய வளவாளரும், சமூக செயற்பாட்டாளரும், எல்லை மீள்நிர்ணய குழுவின் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினருமான எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் சேர் யாழ்ப்பாணத்தில் மரணித்திருக்கின்றார். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 

முஸ்லிம்களுக்குப் பாதகமானது என அவா் கவலைப்பட்டுக் கொண்டிருந்த எல்லை மீள்நிர்ணய அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள் அவரது மரணம் நிகழ்ந்திருக்கின்றது. 

என்னை நேசித்த, என்னால் அதிகமதிகம் நேசிக்கப்பட்ட ஒரு மிகப் பெரும் ஆளுமையான ஹஸ்புல்லா சேரின் மறைவு…. இன்னும் நூற்றாண்டுகள் கடந்தாலும் நிரப்ப முடியாத இடைவெளி என்பதில் மறுபேச்சில்லை. 

கைகள் நடுங்குகின்றன…. 
எங்கிருந்து ஆரம்பிப்பது, எதை எழுதுவது எனத் தெரியவில்லை.

பேராசியர் ஹஸ்புல்லாவைப் போல இந்த சமூகத்தை நேசிக்கின்ற, அதற்காக அல்லும் பகலும் ஆய்வு செய்து உழைக்கின்ற, கவலைப்படுகின்ற ஒருவரை நான் இதுவரைக் கண்டதில்லை. 
அவா் புவியியல் அறிவாளி, சமூகவியல் தெரிந்தவா், அரசியல் அறிந்தவா், தலைக்கனம் இல்லாதவா், பக்குவமானவா், இந்த சமூகத்திற்காக உழைக்கின்ற யாருக்கும் ஒரு தந்தையைப் போல உதவக் காத்துக் கொண்டிருப்பவா்…

மிக முக்கியமாக இன்று முஸ்லிம்களுக்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரினதும் ஆளுமையை கூட்டாகச் சோ்த்தாலும் அதை விட உயா்ந்த ஆளுமை கொண்டவரும் அவா்களை விட அதிகமாக இந்த சமூகத்திற்காக சிந்திப்பவருமாக ஹஸ்புல்லாஹ் இருந்தார். 

பல விடயங்கள் பற்றி அவரிடம் பேசி, தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன். குறிப்பாக, 
எல்லை மீள்நிர்ணயம், வடமாகாண மக்களின் மீள்குடியேற்றம், முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பான பல கட்டுரைகளை  எழுத அவா் தகவல்மூலமாக, உசாத்துணையாக இருந்திருக்கின்றார். 

அவா் பற்றி சொல்லப்பட வேண்டிய முக்கிய விடயம் எல்லை மீள்நிர்ணயம் தொடா்பாக அவா் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு ஆற்றிய பங்களிப்பாகும். 

மாகாணங்களின் கீழ் வரும் தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணய குழுவின் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினராக ஹஸ்புல்லா இருந்தார். 


வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கின்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும வகையில் தொகுதிகள் எல்லையிடப்பட வேண்டும் அல்லது இரட்டை அங்கத்தவா் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அடித்துக்கூறினார். 

ஆனால் அக்குழுவில் இருந்த தமிழ், சிங்கள உறுப்பினா்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி “உனது வாயைப் பொத்து“ என்று சொன்னதாகவும் நான் கேள்விப்பட்டேன். இதனால் முஸ்லிம்களின் உறுப்புரிமை குறையப் போகின்றதே என்று பேராசிரியா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். 

கடைசியில்...  தனது சிபாரிசுகள் உள்ளடக்கப்படாமையால், விசனமடைந்திருந்த ஹஸ்புல்லா சேர், தனியாக ஒரு அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்திருந்தார். 

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இல்லாத இந்த தைரியத்தை, மிகவும் சாதுவான பேராசியர் - தனி அறிக்கை மூலம் வெளிப்படுத்தினார்  என்பதற்காக இந்த 20 இலட்சம் முஸ்லிம்களும் எழுந்து நின்று அவரைப் பாராட்ட வேண்டும். 

”ஆனாலும் எல்லை நிர்ணய குழுவின் பிரதான அறிக்கையே பாராளுமன்றத்திற்கு வருகின்றது. என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். இனி நீங்கள்தான் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அடிக்கடி சொன்னார். இந்த அறிக்கை  வென்று சட்டமாகி, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடக் கூடாது என அவர் அங்கலாய்க்காத நாளில்லை. 

இந்நிலையில், எல்லை நிர்ணய அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் இன்று காலை அவரது உயிர் பிரிந்திருக்கின்றது.

நெஞ்சுவலி வந்ததாக கேள்விப்பட்டதும்….. 
“இந்த அறிக்கையின் தோல்வி குறித்து அவா் என்ன நினைத்திருப்பாரோ, எதைப்பற்றிக் கவலைப்பட்டிருப்பாரோ அல்லது ஆறுதல் அடைந்திருப்பாரோ“.... என்றுதான் மனசு காலையில் இருந்து எண்ணிக் கொண்டிருக்கின்றது. 

பேராசிரியா் ஹஸ்புல்லாஹ் இந்த சமூகத்திற்கு செய்த சேவையின் அளவுக்கு அவரை முஸ்லிம்கள் இன்னும் உயா்ந்த இடத்தில் வைத்து பார்த்திருக்க வேண்டும் என்ற கவலை எனக்கு எப்போதும் இருந்தது. 

இப்போது அது உறுத்துகின்றது. 

உங்கள் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு, பல்கலைக்கழக மாணவா்களுக்கு, அடுத்த தலைமுறைக்கு அவரைப் பற்றிச் சொல்லுங்கள். 

இந்த சமூகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றது. 

- ஏ.எல்.நிப்றாஸ் (ஊடகவியலாளா்)

2 comments:

  1. He is very simple. I like him very much.

    ReplyDelete
  2. பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு மிகுந்த விசனத்தை அளிக்கிறது. சமுதாயத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர் அவர். இரவு பகல் பாராது சமுதாயத்தின் அரசியல், கல்வி, இனஐக்கியம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்களுக்காகவும் தன்னலம் பாராது உழைத்த ஒரு ஆளுமை ஹபுல்லாஹ். அவருக்காக சமூகம் கடமைப்பட்டுள்ளது. அவர் போன்ற மேலும் பல புத்தி ஜீவிகள் இந்நாட்டிற்குத் தேவை. அவர் விட்ட பணியைத் தொடர்வதே அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும். அவருக்கு எல்லாம்வல்ல அல்லாஹ் நற்கூலியளிப்பானாக!

    ReplyDelete

Powered by Blogger.