Header Ads



கிறிஸ்தவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அளித்த சாசனம்


எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையில் ஒரு பாலைவனம் உண்டு. அந்தப் பாலைவனத்தில் 7,359 அடி உயரத்தில் தவ்ராத் (தோரா) எனும் வேதம் அருளப்பட்ட ஆலிவ் மரங்கள் நிறைந்த மலை! இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘தவ்ராத்’ வேதம் அருளப்பட்டதற்குமுன் தவம் புரிந்த குகையைத் தன் உச்சியில் கொண்ட மலை! தூர்ஸீனா என்றும், தூர்ஸீன் என்றும் அத்தூர் என்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்படும் மலை. எல்லாம் வல்ல இறைவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உரையாட அருட்பிழம்பாகத் தோன்றிய மரத்தை அருகண்மையில் கொண்ட மலை!

இந்த மலையின் அடிவாரத்தில்தான் செயிண்ட் காதரின் பெயரால் ஒரு கிறிஸ்துவ மடாலயம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. இன்றைக்கும் இங்கே கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்குள் செல்ல படிக்கட்டுகளோ பாதைகளோ இல்லை. இதற்குள் அனுமதிக்கப்படுவோர் கயிற்றால் கட்டி, பிணைக்கப்பட்ட ஒரு கூடையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கூடை மதில்சுவர் வழியாக மேலே இழுக்கப்படும். இதே முறையைப் பயன்படுத்தித்தான் மீண்டும் வெளியே வரவேண்டும். அந்த அளவுக்கு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு, வருவோரைக் கட்டுப்படுத்திக் வைத்துக்கொண்டு, தவ வாழ்வு வாழ்ந்தார்கள் இந்த மடாலயத்தில் இருந்தவர்கள்.

ஹிஜ்ரீ 5 - 6 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட ஒரு கால கட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கண்ட ஸீனா மலையில் கதரின் (CATHERIN) மடாலயத்திலிருந்த கிறிஸ்துவத் துறவிகள், பாதிரிமார்கள் மற்றும் எல்லா கிறிஸ்தவர்களுக்குமாக ஒரு சாசனத்தை அளித்தார்கள்.

இந்த சாசனம்   வரலாற்று ஆசிரியர்களால் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.   அது இதுதான்:

‘அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரல், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சார்பாக, குறிப்பாக ஸீனா மலைப் பாதிரிகளுக்கும், பொதுவாக எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இந்த சாசனம் அளிக்கப்படுகிறது.

‘மெய்யாகவே, இறைவன் உயர்வும், மாட்சிமையும் உள்ளவன். அவனிடமிருந்தே எல்லா இறைத்துதர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் இறைவனுக்கு எதிராக அநியாயம் செய்ததாக அத்தாட்சி இல்லை. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளிலிருந்து – அவர்கள் மேலோராயினும், கீழோராயினும், கண்ணியமுள்ளேராயினும், இல்லாவிட்டலும் - கிறிஸ்தவர்களுடனும், அவர்களுடன் உறவு கொண்டோருடனும், தமது நாட்டு இனமக்களும், தமது மார்க்கத்தைச் சேர்ந்தோரும் நடந்து கொள்ளும்படி வக்குறுதி செய்து அப்துல்லாஹ்வின் மகனாரும், இறைத்துதருமான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பாதுகாப்பளித்து எழுதிக்கொடுத்த சாசனம் என்னவென்றால்;

இந்த உடன்படிக்கையில் காணப்படும் எனது வாக்குறுதியை என்னுடைய மக்களில் எவரேனும், தகர்த்தெறிந்துவிட்டால், அவர், இறைவனுடைய வாக்குறுதியை முறித்தோராகவும், சத்தியம் செய்து கொடுத்ததற்கு மாறு செய்தோராகவும் - இஸ்லாத்திற்கு மாறு செய்தோராகவும், அவர் அரசனாயினும், வேறு யாராயினும் - சாபத்திற்கு உரியோராவர்.

கிறிஸ்தவப் பாதிரிமார்களில் எவரேனும் பிரயாணம் செய்யும்பொழுது, மலை மீதோ, குன்றின் மீதோ, கிராமத்திலோ, மக்கள் வாழும் வேறு எந்த இடத்திலோ, கடலிலோ, பாலைவனத்திலோ, சந்நியாசி மடத்திலோ, மாதா கோவிலிலோ, இறைவணக்கம் செய்யுமிடத்திலோ இருப்பாரானால், அவர்களையும், அவர்களது பொருளையும் எனது முழு உள்ளத்துடன் உதவி செய்து பாதுகாக்க, நானும் என் எல்லா மக்களும், அவர்களுக்கு மத்தியில் இருப்போம். ஏனென்றால், அவர்களெல்லாம், என்னுடைய மக்களில் ஒரு பகுதியாவர். மேலும் அவர்களால் எனக்கு பெருமையுண்டு.

அவர்களிடமிருந்து காப்பு வரி கேட்கக்கூடாதென்றும், வேறு வரியும் வசூலிக்கக்கூடாது என்றும் எல்லா அலுவலர்களுக்கும் நான் இதன் மூலமாகக் கட்டளையிடுகிறேன். ஏனென்றால், இம்மாதிரியான விஷயங்களில் அவர்கள் மீது பலவந்தம் செய்யப்படலாகாது.

கிறிஸ்தவர்களுடைய நீதிபதிகளையும், கவர்னர்களையும், மாற்ற (நீக்க) முஸ்லிம் அலுவலர்களுக்கு உரிமை கிடையாது. அவர்களெல்லாம், விலக்கப்படாமலே அந்தந்த அலுவல்களில் இருப்பார்கள்.

அவர்கள் வீதிகளில் பிரயாணம் செய்யும்பொழுது எவரும் அவர்களை துன்புறுத்தக்கூடாது.

அவர்களுடைய மாதா கோவில்களை இழக்கும்படிச் செய்ய முஸ்லிம்களுக்கு உரிமை கிடையாது.

எனது இந்த கட்டளைகளை, எனது மக்களில் எவரேனும் நிராகரித்தால், அவர் இறைவனுடைய கட்டளைகளை நிராகரிப்போராவர்.

அவர்களுடைய நீதிபதிகள், கவர்னர், சந்நியாசிகள், வேலையாட்கள், சீடர்கள், அவர்களுடைய ஆதரவில் இருப்போர் அனைவரும் காப்புவரி கொடுக்க வேண்டியதில்லை. வேறுவிதமான இடையூறுகளையும் அவர்கள்மீது சுமத்தக்கூடாது. ஏனென்றால், அவர்களும், அவர்களைச் சார்ந்தோரும், நான் இப்பொழுது சத்தியம் செய்து கொடுக்கும் சாசனத்தில் அடங்கியிருக்கிறார்கள்.

தனிமையாகவும், சாந்தியுடனும் மலைமீது வசிப்போரின் வருமானத்திலிருந்து காப்புவரியோ, வேறு வரியோ வசூலிக்கக் கூடாது. அவர்களுடைய பொருளில் இருந்தும் முஸ்லிம்கள் எதையேனும் எடுக்கக்கூடாது. ஏனென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அவசியமானதையே தங்களிடம் வைத்துக்கொள்வார்கள்.

அருவடைக் காலத்தில் ஏராளமான மகசூல் கிடைத்தால், மக்கள் அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து உதவ வேண்டும்.

போர்க்காலத்தில், அந்த பாதிரிமார்களை, அவர்களுடைய ஒதுக்கிடத்திலிருந்து அகற்றவே, போர்க்களத்திற்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தவோ கூடாது. மேலும், அவர்கள் காப்புவரி (ஜிஸ்யா) கெடுக்க வேண்டியதில்லை.

இந்த நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், செல்வமும் வியாபாரமும் உள்ள காரணத்தினால் ஆள்வரி கொடுக்கத் தகுதியுள்ள கிறிஸ்துவப் பிரஜைகளும், நேர்மையானதற்கு அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை. இதைத்தவிர, அவர்கள் எதையும் கொடுக்கும்படி கேட்கப்பட மாட்டார்கள்.

ஒரு கிறிஸ்துவப்பெண் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால், அந்த மனைவி, மாதா கோவிலுக்கோ, தொழுகைக்கோ, போவதிலிருந்தும் அவர்களுடைய மதக்கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றுவதிலிருந்தும் அந்த முஸ்லிம் கணவன் தன் மனைவியின் விருப்பத்திற்கு விரேதமாக நடக்கலாகாது.

(யூத அல்லது கிறிஸ்தவத் தாய்க்குப் பிறந்த முஸ்லிம் மகன், தனது தாயை அவளுடைய வணக்கஸ்தலத்தின் கதவு வரை குதிரை, கோவேறு கழுதை போன்ற மிருகத்தின் மீதோ அல்லது ஏழையாயிருந்தால், அல்லது தாயார் கிழவியாகவோ முடமாகவோ இருந்தால், அவன் அவளைத் தனது தோளின்மீது சுமந்து கொண்டோ போக வேண்டும்.)

அவர்களது மாதா கோவில்களை அவர்கள் பழுது பார்க்கையில், அவர்களை முஸ்லிம்கள் எவரும் தடுக்கலாகாது. மாதா கோவில்கள், சந்நியாசி மடங்கள் அல்லது சமய சம்பந்தமான வேறு விஷயங்களில், கிறிஸ்தவர்களுக்கு உதவி தேவையானால், முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

நான் அளித்த இந்த சாசனத்திற்கு விரேதமாக நடப்போனும், அதன் கருத்துக்கு மாறுபட்ட கருத்துடையோனும், அதை விளம்பரப்படுத்துவோனும், மெய்யாகவே, இறைவனையும் இறைத்தூதரையும் நிராகரித்தவனாவான்.

(கிறிஸ்துவர்களாகிய) அவர்கள்மீது எவரும் போர் செய்யலாகாது. ஆனால், அதற்கு மாறாக முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவி செய்து போரிட வேண்டும். வெளிநாட்டுக் கிறிஸ்துவர்களுடன் முஸ்லிம்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், (நமது நாட்டில் வசிக்கும்) கிறிஸ்துவக் குடிமக்கள் இந்தப் போரின் கரணமாக இழிவாகக் கருதப்படலாகாது.

என் மக்களில் எவரேனும் இந்த வாக்குறுதிக்கு மாற்றமாக உலகம் முடியும் வரை நடக்கலாகாது என்று நான் விளம்பரப்படுத்துகிறேன்."

இது உலகம் கண்டிராத நல்லிணக்கம் பொங்கும் சாசனம் என்று சொல்லவும் வேண்டுமோ?

சமய உரிமை, சமயச் சுதந்திரம், சமய நம்பிக்கையாளர்களின் நலன்கள் முதலியவற்றை முழுமனதோடு கண்ணியப்படுத்தும் ஓர் மாபெரும் தலைவராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திகழ்கிறார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையா என்ன!

இத்தகைய சாசனம் கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்துவ மன்னர்களால்கூட கிறிஸ்துவ மக்களுக்கு அளிக்கப்பட்டதாக தெரியவில்லையே!

தம் சமயம் அல்லாத பிற சமயப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி, அவர்களின் சமய உணர்வுகளும், உரிமைகளும் முழுமையாக கவுரவிக்கப்பட வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு ஆகியவற்றின் மூலம் சமய நல்லிணக்கத்தை குடும்பத்திலிருந்து தொடங்கி, வெளியுலகிலும் விரும்பி வளர்கச்செய்யும் ஒரு புதுமையான முன்மதிரியன்றோ இது!

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதன் எத்தனையோ நல்லவைகளை எண்ணிப்பார்க்கும் கால அவகாசம் இல்லாமல் வாழ்ந்து வருகிறான். ஆனால், ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கால சூழ்நிலையிலும், ஒரு மாமனிதரின் பேருள்ளத்தில் எவ்வளவு தாராளமான, பெருந்தன்மையான நல்லிணக்கச் சிந்தனைகள் சுரந்துள்ளன என்பதை உலகிலுள்ள ‘உயர்ந்தோரும்’ ‘பண்புடையோரும்’ எண்ணிப்பார்க்க வேண்டும். ஏனெனில், எப்பொழுதும் ‘உலகம் என்பது உயர்ந்தோர் மட்டே!’ ‘பண்புடையர் பட்டுண்டு உலகம்!’.

- ஏம்பல் தஜம்மமுல் முஹம்மத், (சிந்தனைச்சரம்)

1 comment:

  1. If "Authenticity" of the document is also attached.. It would be highly acceptable.

    Can the writer of this article... provide Authentic source of this documentation as proof for its ACCEPTANCE?

    ReplyDelete

Powered by Blogger.