திருகோணமலை ஆட்டோ சங்கத்தின், முன்மாதிரிமிக்க செயற்பாடுகள்
திருகோணமலையில் இயற்கை அழகுடன் வியப்பூட்டும் வகையில் செயற்படும் முச்சக்கர வண்டி தரிப்பிடம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நகரின் பிரதான பகுதி ஒன்றில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் தூய்மையான முறையில் இந்த தரிப்பிடம் காணப்படுவதாக தெரிய வருகிறது.
கடந்த 26 வருடங்களாக மூவினங்களை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் ஒற்றுமையாக செயற்படும் இந்தப் பகுதி ஐக்கியம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஐக்கிய ஆட்டோ சங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி தரிப்பிடம் குறித்து பல்வேறு விடயங்களை ஆட்டோ சங்க செயலாளர் குறிப்பிட்டார்.
29 ஆட்டோக்களை கொண்டது எங்களுடைய இந்த A பார்க் நிலையம். 1992 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
மூவினத்தையும் சேர்ந்தவர்கள் இங்கு தொழில் செய்கின்றோம். அதனால்தான் இதற்கு ஐக்கிய ஆட்டோ சங்கம் என பெயர்வைத்துள்ளோம். ஒற்றுமையுடன் செயல்படும் எங்களுக்கென ஒழுக்க விதிமுறைகள், சட்டதிட்டங்கள் இருக்கிறன.
எமது ஆட்டோ பார்க் ஐ கூட தினமும் சுத்தமாக துப்பரவாக வைத்திருக்கிறதுக்கும் அட்டவணை ஒன்றை அனைவரும் பின்பற்றுகிறோம். இங்குள்ள நிழல்தரும் மரங்களைக்கூட நாங்கள்தான் வைத்து வளர்த்தெடுத்தோம்.
பகல் இரவு நேர சேவை வழங்கும் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறோம். எம்மை நோக்கி வரும் பயணிகள் யாராக இருந்தாலும் அவர்கள் உள்நாட்டினரோ அல்லது வெளி நாட்டினரோ அவர்களது பாதுகாப்பான பயணம் தொடர்பாக அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். நியாயமான முறையில் கட்டணங்களையும் பெற்றுக்கொள்கின்றோம்.
பயணத்தின் போது பயணிகள் தவறவிட்ட உடைமைகள் பணம் கையடக்கத்தொலைபேசி போன்றவற்றை பெற்றுக்கொடுத்திருக்கிறோம்.
பணமில்லாது தவிக்கும் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவியிருக்கிறோம். புதிதாக குறிப்பாக இரவுநேரங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு பலவழிகளையும் அவர்களுக்கு உதவியிருக்கிறோம். இதுமட்டுமில்லாமல் சில சங்கடமான நிலைமைகளையும் எதிர்நோக்குகின்றோம். தூர பயணங்களின்போது பணம் தராமல் பயணிகள் ஓடிய சந்தர்ப்பங்களும் உள்ளதாக குறிப்பிட்டார்.
பொதுவாக முச்சக்கரவண்டி சாரதிகள் தமது உழைப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை அழகுடன், நல்லிணக்கமாக செயற்படும் முச்சக்கர வண்டி நிலையம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment