'ஆயுதத்தை கீழே வைப்போம்' பன்நூலாசிரியர் மடவளைக் கலீல் பொலீஸ் சேவையிலிருந்து ஓய்வு
-JM.Hafees-
இரு மொழிக் கவிஞரும், பன்நூலாசிரியருமான மடவளைக் கலீல் 34 வருட அரச சேவையிலிருந்து (8.8.2018) ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் சார்ஜண்ட் ஆகப் பணிபுரிந்த இவர் தமிழ், சிங்கள மொழிகளில் சரளமாகக் கவிதை இயற்றிப்பாடக்கூடியவர். இவர் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் சிங்களக் கவிதை நூலும் ஒன்றாகும்.
கொழும்பு, காலி, வல்வெட்டித்துறை , ஒட்டிசுட்டான், தம்புல்ல, மன்னார், மாத்தலை போன்ற பல இடங்களில் இவர் பொலீஸ் துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவு, கம்பி இல்லா தொலைத் தொடர்பு டெலிகிராபி இயக்குனர், பொலீஸ் சமிக்ஞை பிரிவு போன்ற பல பதவிகளை வகித்த இவர் இறுதியாக மாத்தளை பொலீஸ் நிலையத்தில் கம்பியில்லா தொலைத் தொடர்பு பிரிவில் சார்ஜண்ட தரத்தில் பணியாற்றினார்.
இவர் 1992ல்; துயறக் கொழுந்துகள் என்ற கவிதை நூலை வெளியிட்டார், பின்னர் 1993ல் கைதிப் புறாக்கள், 1995ல் இதயக் கதவுகள் (சிறுகதை) அதன் பின்னர் 'அவிய பிமதபமு' (ஆயுத்ததைக் கீழே வைப்போம்) என்ற சிங்கள நூலையும் 1998ல் வெளியிட்டார். அவிய பிபதபமு என்ற இவரது சிங்கள நூல் பாரிய வரவேற்பை பெற்றது. ஆயுதப்படையுடன் தொடர்பு பட்ட ஒருவர் யுத்தகாலத்தில் சமாதானம் வேண்டி மாற்று மொழியில் வெளியிட்ட நூலை பலரும் பாராடடினர். இது பிரதேச ரீதியில் பல விறுதுகளை பெற இவருக்கு வாய்ப்ளித்தது. குறிப்பாக மத்திய மாகாண சாகித்திய விருது, சாமஸ்ரீ தேச கீர்த்தி, ரத்தினதீபம், மடவளை டொப் டுவன்டி கலைஞர் விருது, உற்பட பல்வேறு விருதகளைப் பெறக்காரணமாகியது.
மடவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது மாத்தளை மாவட்த்திலுள்ள உக்குவலையில் தனது துணைவியாருடன் வாழ்ந்து வருகிறார்.
Post a Comment