தொழுகை நடந்தபோது நிலஅதிர்வில் இடிந்த பள்ளிவாசல் - உடல்களை மீட்கும் நடவடிக்கை துரிதம்
இந்தோனேசியாவின் லொம்பொக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தில் தரைமட்டமான பள்ளிவாசல் ஒன்றில் பலரும் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்பாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
6.9 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 100 ஐ தண்டியிருப்பதோடு, 20,000 பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர்.
வடக்கு லொபொக்கில் சேதமடைந்த ஆயிரக்கணக்கான கட்டடங்களில் இந்த பள்ளிவாசலும் ஒன்றாகும். இதன் சிதைவுகளில் இருந்து ஏற்கனவே இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பூகம்பம் ஏற்படும்போது பள்ளிவாசலுக்குள் சுமார் 100 பேர் தொழுதுகொண்டிருந்ததாக அங்கிருந்து உயிர்தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பலரும் இடிபாடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கலக்கமடைந்த நிலையில் முஹமது ஜுவன்தா என்பவர் நேற்று கூறியதாவது, “இரண்டு வரிசையில் மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். ஒரு வரிசையில் சுமார் 50 பேர் இருப்பார்கள். பள்ளிவாசலுக்குள் மொத்தம் 100 பேர் இருந்திருப்பார்கள்” என்றார். இந்த பள்ளிவாசலில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை பற்றி இந்தோனேசிய அனர்த்த முகாமை எந்த தகவலும் அளிக்காத போதும் பலரும் காப்பாற்றப்பட வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.
“பூகம்பம் ஏற்படும்போது நான் பள்ளிவாசலுக்குள் இருந்தேன். அதிர்வு பலம்பெற்றதை அடுத்து எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். பள்ளிவாசல் இடியும்போது நான் வெளியே வந்துவிட்டேன்” என்று ஜுவன்தா குறிப்பிட்டார்.
இந்நிலையில் பள்ளிவாசலுக்கு வெளியில் உரிமைகோரப்படாத உடைமைகளை அடிப்படையாகக் கொண்டு அங்கு 30 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று உள்ளுர் கிராமத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் பலரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூகம்பத்திற்கு பின்னரான அதிர்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை வழங்குவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக உதவி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
லொம்பொக்கின் பிரமான நகரான மடாராவில் உள்ள மருத்துவமனையும் பூகம்பத்தால் சேதமடைந்திருக்கும் நிலையில் காயமடைந்தவர்களுக்கு திறந்த வெளியில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment