கருணாநிதியின் உடல், இன்று நல்லடக்கம் - கூட்ட நெரிசலில் இருவர் பலி, பலர் காயம்
கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் குவிந்துவருவதால், பெரும் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹால் வளாக சுவற்றை ஏறிக்குதித்து வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டுமென்றும் தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் திட்டமிட்டபடி இறுதி ஊர்வலத்தை 4 மணிக்கு நடத்த முடியுமென்றும் கூறியிருக்கிறார். உங்கள் சகோதரனாகக் கேட்கிறேன், தயவுசெய்து கலைந்துசெல்லுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு இருவர் இறந்த நிலையில் கொண்டுவரப்படதாகவும், 41 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் என ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை காலமான கருணாநிதியின் உடல் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.
காலை முதல் ராஜாஜி அரங்கத்தில் அதிக அளவில் திரண்ட தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டது.
ஒரு கட்டத்தில் அதிக அளவில் தொண்டர்கள் திரண்ட நிலையில், முக்கிய பிரமுகர்கள் நுழைவாயில் மூலம் ராஜாஜி அரங்கத்தில் நுழைய முயன்றவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
Post a Comment