Header Ads



வவுனியாவில் பெண்களுக்கு எதிராக, ஒன்றுதிரண்ட பெண்கள்

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வட மாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமான குறித்த போராட்டமானது ஏ9 வீதியூடாக வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தினை சென்றடைந்துள்ளது.

இதன்போது, தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள். இதற்கு காரணமான, சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும்.

தங்களுடைய நிர்வாண படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் சிமாட்போன் பாவனை தடை செய்யப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இணையத்தளங்களில் பெண்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதை தடை செய்ய வேண்டும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மாலைநேர வகுப்புக்களை தடை செய்ய வேண்டும், பாடசாலை மாணவர்களின் போதை பாவனையை முற்றிலும் தடுப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்து கொண்டோர் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில், வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

மகஜரினை பெற்றுக்கொண்ட வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும், உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கி தீர்வினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.