வீர வசனம் பேசும் நீங்கள் எதற்காக அஞ்சுகிறீர்கள் - மகிந்த அணியிடம் அநுரகுமார கேள்வி
மக்களின் பலத்தை நிரூபித்துள்ளதாக கூறும் 70 பேர் அணி பலத்தை காட்டி ஆட்சியை கைப்பற்றுவதை விடுத்து எதிர்க்கட்சி பதவிக்கு ஏன் போராடுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பதவி குறித்து பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவர் பதவி தரக்கோரி பொது எதிரணியினர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஆரம்பத்தில் 42 உறுப்பினர் இருந்த போதும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கேட்டனர், 54 பேர் இருந்த போதும் எதிர்க்கட்சி பதவியை கேட்டனர், இப்போது 70 பேர் உள்ளபோதும் எதிர்க்கட்சி பதவியை தரக்கோருகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கையில் எந்தவித அடிப்படை நியாயப்பாடுகளும் இல்லை.
இந்த பாராளுமன்றத்தில் ஆறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளில் இருந்தே உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 19 ஆம் திருத்தத்துக்கு அமைய கட்சி தன்மைகளை கைவிட்டு செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டால் எதிர்க்கட்சி ஒன்று இல்லாத நிலைமை உருவாகும்.
இப்போதுள்ள நிலைமையில் எதிர்க்கட்சியின் எண்ணிக்கை குறைவுதான், மூன்று கட்சிகளுமாக மொத்தமாக 23 பேர் தான் உள்ளோம். நாம் பலம் குறைந்த எதிர்க்கட்சி தான், அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் பலவீனமாகவே நாம் உள்ளோம். ஆனால் பாராளுமன்ற விதிமுறைக்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது என ஒருபோதும் கூற முடியாது.
பொது எதிரணியினர் தமக்கு தான் மக்கள் பலம் உள்ளதாக கூறுகின்றனர், 70 பேர் எதிர்கட்சியாக உள்ளதாக கூறுகின்றனர், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் உள்ளார், அனுபவம் மிக்க தலைவர்களை தக்கவைதுள்ளதாக கூறுகின்றீர்கள். இவ்வளவு வீர வசனம் பேசும் 70 பேர் ஏன் 23 பேருக்கு அஞ்சி செயற்படவேண்டும். உங்களின் பலத்தை காட்டி அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்கட்சியில் அமைர்ந்துகொண்டு காட்சியை கைப்பற்ற முடியுமே. அதை விடுத்து ஏன் 23 பேர் உள்ள அணியில் தஞ்சம் புகுந்துகொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
Post a Comment