Header Ads



தொலைபேசி உரையாடல்கள், ஒட்டுக் கேட்கப்படுகிறதா..?

அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்களின் தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக ஒட்டுக் கேட்கப்படுவதாக வார இறுதி சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், நுகேகொடை, எபிட்டமுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் மையம் இயங்கி வருகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த மையம் இயங்கி வருகின்றது. குறித்த பிரதிப் பெலிஸ்மா அதிபருக்கு நெருக்கமான ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வீடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான எமில்காந்தனுக்கு சொந்தமான வீடு எனவும், அரசாங்கம் அதனை பறிமுதல் செய்து பொலிஸாரின் பயன்பாட்டுக்காக வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசியப் பாதுகாப்பிற்காக ஐரோப்பா மற்றும் ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மையம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக உருவாக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப் தவிர்ந்த, வைபர், இமோ, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களின் தொடர்பாடல்களையும் ஹெக் செய்யக்கூடிய கருவிகள் மற்றும் மென்பொருட்கள் இந்த மையத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கருவிகள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுவதாக சிரேஸ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் வார இறுதி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரியொருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கில் இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு நெருக்கமான அமைச்சர்கள் யார், தமக்கு எதிரான அரசியல்வாதிகள் யார், தமக்கு எதிராக செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் யார் என்பது குறித்து ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மையம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.