மியன்மார் படையினரை சர்வதேச, நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை
ரொகிங்யா இனத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளிற்காக மியன்மாரை சர்வதே நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என தென்கிழக்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 130 பேர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மனித உரிமைகளிற்கான ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
ரகைன் மாநிலத்தில் இடம்பெற்ற கொலை நடவடிக்கைகளிற்காக மியன்மார் படையினரை நீதியின் முன்நிறுத்தவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மியன்மார் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலையில் இல்லை அந்த நாடு விசாரணைகளை மேற்கொள்ளப்போவதுமில்லை என தெரிவித்துள்ள மலேசிய அரசியல்வாதியொருவர் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை உடனடியாக மியன்மாரை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்ட மியன்மாரில் உள்ளவர்களை பொறுப்புக்கூற செய்யவேண்டும் மீண்டும் அவர்கள் அதே குற்றங்களை இழைப்பதற்கு அனுமதிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மார் படையினர் ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு ஒரு வருடமாகின்ற நிலையிலேயே ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
Post a Comment