காத்தான்குடியில், பாடசாலை மீது தாக்குதல்
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் பாடசாலைக்குச் சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழமைபோன்று புதன்கிழமை இயங்கிய பாடசாலை நேற்று பிற்பகல் மூடப்பட்ட பின்னர் வியாழக்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டபொழுது அதன்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த தாக்குதல் சம்பவத்தினால் பாடசாலையின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதோடு தளபாடங்கள் உட்பட இன்னும் பல உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக பாடசாலை நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த பாடசாலையை அண்டியுள்ள சி.டி.வி காணொளிக் கெமரா பதிவுகள் மூலமும் மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளோர் ஆகியோரிடமும் சம்பவத்தின் தகவல்கள் பற்றி அறிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது காத்தான்குடியில் பழைமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான காத்தான்குடி 5 அல்ஹிறா வித்தியாலயத்திலிருந்து ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறாகப் பிரிக்கப்பட்ட கனிஷ்ட வித்தியாலயமாகும். ஐந்தாந் தரம் வரை இங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
Post a Comment