கொழும்பு மாநகரசபையின், எதிர்க்கட்சித் தலைவராக மன்சில் நியமனம்
கொழும்பு மாநகர சபையில் நடைபெறும் ஊழல், மோசடிக்கு எதிராக எதிர்க்கட்சி எதிர்ப்பினை வெளியிடுவதுடன் கொழும்பு மாநகரில் வரி செலுத்துவோரின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் என கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எச்.மன்சில் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களால் எம்.எச். மன்சில் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எம்.எச். மன்சில் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சித் தலைமைப் பதவிக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட வேண்டுமென 25 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய கோரிக்கையை முன்வைத்தார். இதனையடுத்து சபையில் பிரச்சினை எழுந்ததையடுத்து இறுதித் தீர்மானம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 1 ஆம் திகதி மாநகர சபை கேட்போர் கூடத்தில் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எனக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 28 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஆவணத்தைச் சமர்ப்பித்தனர். ஆனால் பொதுஜன பெரமுன கட்சியினருக்கு 25 உறுப்பினர்களே ஆதரவு வழங்கினர். இந்நிலையில் என்னால் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதால் நான் கொழும்பு மாநகர மேயரினால் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.
எதிர்த்தரப்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் எனக்கு ஆதரவு வழங்கினார்கள். ஆனால் அசாத் சாலி எனக்கு ஆதரவு வழங்கவில்லை.
எனக்கெதிராக செயற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
-விடிவெள்ளி
Post a Comment