Header Ads



மருத்துவமனையில் படுத்துள்ள ஞானசாரரை, உடனடியாக சிறைச்சாலை பொறுப்பில் எடுக்க உத்தரவு

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் படி 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அந்த தண்டனையை ஆறு ஆண்டுகளில் அனுபவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, உடனடியாக சிறைச்சாலை பொறுப்பில் எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, ஞானசார தேரர் சிகிச்சைபெறும் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு நீதிமன்ற அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதன் காரணமாக ஞானசார தேரர் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.