Header Ads



மீன் விற்கும் மாணவி, ஹனன் ஹமீத்

கல்லூரியில் படித்துக்கொண்டே மீன் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வரும் மாணவி ஹனனுக்கு கேரளாவே ஆதரவு அளிக்கும். அவரைப் பார்த்துப் பெருமைப்பட வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு கொடுத்துள்ளார்.

குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையாலும், படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தாலும், மாலை நேரத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் கல்லூரி மாணவி ஹனன் ஹமீத் (19 வயது).

தம்மனம் சந்திப்புப் பகுதியில் மாலை நேரத்தில் படு ஜோராக மீன் விற்பனையில் ஈடுபடும் ஹனன் பற்றி தெரிய வந்த தகவல் என்னவென்றால், அல் அஸார் கலைக் கல்லூரியில் வேதியியயல் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் .

அதிகாலையிலேயே எழுந்து மீன் சந்தைக்குச் சென்று மீன்களை வாங்கிக் கொண்டு தம்மனம் சந்திப்புப் பகுதிக்குச் சென்று விடுகிறார். அங்கு ஒரு வீட்டில் மீன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு கல்லூரிக்குச் செல்கிறார்.

கல்லூரி முடிந்து சுமார் இரண்டரை மணி நேரம் பயணித்து தமன்னம் வந்து, இரவு 9 மணி வரை மீன் விற்பனையில் ஈடுபடுகிறார். பிறகு வீட்டுக்குச் செல்கிறார். இதுதான் ஹனனின் அன்றாட வாழ்க்கை.

குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையால், குடும்பத்திற்கு உதவுவதற்காகவே மீன் விற்பனையில் ஈடுபடுகிறேன். டியூஷன் எடுப்பது, நகைகள் செய்வது என பல வேலைகளை செய்துள்ள ஹனன், மலையாளத்தில் கவிதைகளையும் எழுதுகிறார்.

ஹனன் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன், மாத்ருபூமி நாளிதழில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் ஹனனின் நடவடிக்கையைப் புகழ்ந்து உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனன் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். ஹனனின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி அவரைக் கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.

ஆனால், ஹனனின் கல்லூரி முதல்வர், தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளிதழில் வந்த செய்தி உண்மையானதுதான். ஹனன் உண்மையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரின் பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்தச் செய்தி போலியானது அல்ல என்று ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், நெட்டிசன்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் ஃபேஸ்புக்கில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஹனனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”ஹனன் குறித்து அறிந்தேன். ஒரு பெண் இளம் வயதில் உழைத்து, சொந்தக்காலில் நிற்பது என்பது பெருமைக்குரியது. தனது உழைப்பினால் கிடைக்கும் பணத்தின் மூலம் குடும்பத்தையும், படிப்பையும் ஹனன் கவனித்துக் கொள்கிறார் என்பது மகிழ்ச்சி.


இதேபோன்ற சூழலில் இருக்கும் மக்கள் நிச்சயம் ஹனனின் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். ஹனன் தனது கல்விக்காக மட்டும் உழைக்கவில்லை, தனது குடும்பத்துக்காகவும் சேர்த்து உழைக்கிறார்.

நான் ஹனனின் சூழலைப் புரிந்துகொண்டதால் அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஹனன், நீங்கள் கண்டிப்பாக துணிச்சலுடன் நீங்கள் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். எந்தவிதமான கடினமான சூழலிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். கேரளாவே உங்களுக்கு ஆதரவு அளிக்கும்” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உண்மை செய்தி என்னவென்று தெரியாமல் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் நம்புவது ஒரு பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கம் எதிர்காலத்தில் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கும் என்று இறுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று கூறினார்கள்.

    அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது.

    நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்" என்று சொன்னார்கள்.

    "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது.

    நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்" என்றார்கள்.

    "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது.

    நபி (ஸல்) அவர்கள் "அவர் "நல்லதை"  அல்லது "நற்செயலை"(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்" என்றார்கள்.

    "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்டார்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்" என்றார்கள்.

    ஸஹீஹ் முஸ்லிம்
    அத்தியாயம் : 12. ஜகாத்
    ஹதீஸ் எண் 1834
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.