மலாயர்களையும், மேமன்களையும் காணவில்லை - முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி - ரிஷாட்
மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பல முரண்பாடான விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களை இலங்கை சோனகர் என்று கணித்திருப்பதால் உள்வாங்கப்படவேண்டிய முஸ்லிம்களாகிய மலாயர், மேமன் என்போர் கணிப்புக்குள் உள்வாங்கப்படவில்லை. இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"இனரீதியான கணக்கெடுப்பில் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள், இந்தியர் தமிழர் என பிரித்துக்காட்டப்பட்டிருக்கின்றார்கள். அதேநேரம் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்கள் என்றோ கண்டிச் சிங்களவர் என்றோ பிரித்துக்காட்டப்படவில்லை. தனி சிங்களவர் என்றே கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களை இலங்கைச் சோனகர் என்று கணித்திருப்பதால் மலாயர், மேமன் முஸ்லிம்கள் உள்வாங்கப்படாமை ஒரு முரண்பாடான விடயமாகும்.
கொழும்பு மாவட்டத்தில் இலங்கைச் சோனகர் 2,49,609 என்றும் இஸ்லாமியர் 2,74,087 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட ரீதியான அங்கத்தவர்களுக்கான கணக்கெடுப்பின்போது 2,49,609 என்ற சனத்தொகையே உள்வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 25,000 தால் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கையின்படி எல்லா மாகாணங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது.
இந்த புதிய மாகாண தேர்தல் தொகுதி முறைமையை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இந்த எல்லை நிர்ணயம் தெளிவில்லாமல் இருக்கிறது. புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தலை சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் சில பெரும்பான்மைக் கட்சிகளும் எதிர்க்கின்றன. பழையமுறையிலேயே தேர்தல் நடத்தப்பட்ட வேண்டுமென்று உறுதியாக நிற்கின்றன.
மாகாண சபைத் தேர்தல் மேலும் காலம் தாழ்த்தப்படக்கூடாது. பழைய விகிதாசார முறையில் அவசரமாக தேர்தல் நடத்தப்படவேண்டும். எமது நிலைப்பாட்டினை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் விளக்கியிருக்கிறோம்" என்றார்.
-Vidivelli
Post a Comment