Header Ads



வெளி விஷமிகளே துவேஷத்தை பரப்புகின்றனர், பேருவளையை சிங்கப்பூராக மாற்றியமைப்பேன்

சிங்கப்பூர் போன்று செழிப்பானதும் வளமானதுமான நகரமாக அடுத்த நான்காண்டு காலத்துக்குள் பேருவளையை மாற்றியமைக்க உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்த பேருவளை நகர முதல்வர் மஸாஹிம் முஹம்மத் இதற்காக 40 வருடங்களில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை நான்கு வருடங்களில் செய்யக் கூடிய துரித வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் கூறினார்.

தனது 35 வருடகால அரசியல் அனுபவங்களைக் கொண்டு இதனைச் சாதிக்க திட உறுதி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுயேச்சையாக பேருவளை நகர சபைக்குப் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஸாஹிம் முஹம்மத் அச்சபையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் அப்பதவிக்குத் தெரிவானதன் பின்னர் முதற்தடவையாக தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணலின் போது தமது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். அவரது நேர்காணல் விபரம் வருமாறு:-

நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பேருவளை நகரசபை தலைவராக மக்களால் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் மகிழ்ச்சி, முதலில் உங்களது கடந்தகால அரசியல் பயணம் தொடர்பாக கூறமுடியுமா?
எனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலப் பகுதியில் அரசியலில் செயற்பாடுகளில் பங்கேற்றேன் முக்கியமாக உள்ளூர் அரசியல் அதாவது எமது கிராமத்தின் நலன்களில் கவனம் செலுத்திவந்தேன். மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொண்டும், புரிந்து கொண்டும் நான் செயற்பட்டேன். எனது பள்ளித்தோழர்களுடன் இணைந்து இயங்கினேன். மூத்த அரசியல் தலைவர்களின் பாதையில் எனது பயணத்தை முன்னெடுத்தேன்.

எட்டு வருடங்கள் பேருவளை தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளேன். 10 வருடங்கள் பேருவளை நகரசபைத்தலைவராக இரண்டு தடவைகள் செயற்பட்டதோடு. இம்முறை மூன்றாவது தடவையாகவும் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதே பாதையில் எனது அரசியல் பயணம் தொடரும்.

மூவின மக்கள் வாழும் பேருவளையில் இந்த வெற்றியை எவ்வாறு அடைந்து கொண்டீர்கள்?

பேருவளையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்பவர்கள். எமக்கிடையே இன, மத, மொழி வேறுபாடோ, குரோதங்களோ கிடையாது சிங்கள, கிறிஸ்தவ மக்கள் முஸ்லிம்கள் மீது நல்ல நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு நாம் ஒருபோதும் துரோகமிழைக்கவில்லை. ஒற்றுமையை கட்டி வளர்த்து வந்துள்ளோம்.

அண்மைக்காலத்தில் வெளியே இருந்து வந்தசில விஷமிகள் எமது மக்கள் மத்தியில் துவேசப் பிரசாரங்களை மேற்கொண்டு இனவன்முறைக்குத் தூபமிட்டனர். அதன் காரணமாக பேருவளை பிரதேசத்தில் குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் நாம் வன்முறைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. அதனால் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படக்காரணமாக அமைந்தது. இது கவலை தரக்கூடிய விடயமாகும்.

நாம் இழந்த சொத்துக்களை மீட்டுக்கொள்ளமுடியும், அழிக்கப்பட்ட கட்டிடங்களை மீளக்கட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் ஆனால் உடைந்த இதயங்களை ஒன்றிணைக்க முடியுமா? பிளவுபட்டுப்போன ஒற்றுமையை மீளக்கட்டியெழுப்ப நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். என்றாலும் நாம் சோர்வடையமாட்டோம். பேருவளையில் இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப உறுதியுடன் இயங்கிவருகின்றோம். மற்றொரு துன்பியலுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாம் என்பதை உறுதிபடக் கூறிவைக்கின்றோம்.

நீங்கள் ஒரு கலாரசிகர், கலையை நேசிப்பவர். அந்த வழியில் தான் ஒருகால கட்டத்தில் அஹூங்கல்லையில் வன விலங்கு சரணாலயம் (Zoo) ஒன்றை அமைத்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு விட்டிருந்தீர்கள். அன்றைய அரசு அதனை மூடியாது. அது பற்றிக் கூறமுடியுமா?

நான் சிறிய வயது முதலே பிராணிகள் மீது பாசம் ஆர்வம் கொண்டவன், சிறுவயதில் வீட்டில் அணில், முயல், ஏன் பூனைகளைக் கூட செல்லமாக வளர்த்தவன். பிற்பட்ட காலத்தில் இந்த ஆர்வம் காரணமாக அஹூங்கல்லையில் (தனியார்) வன விலங்கு சரணாலயத்தை உருவாக்கினேன்.

இதில் நிறைய வன விலங்குகள் காணப்பட்டன. இந்த விலங்குகளை பார்க்க வந்த ஒரு பிள்ளை தன்னிடமிருந்த கூர்மையான ஒரு ஆயுதத்தை சிங்கத்தின் காதில் குத்தியதால் வெகுண்டெழுந்த சிங்கம் அப் பிள்ளையை தாக்கியதால் ஏற்பட்ட விபரீதம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.
நான் எதிரணியில் அரசியல் செய்து கொண்டிருந்ததால் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் அரசியல் நோக்கதுடன் சரணாலயத்தை இழுத்து மூடினார். இதனால் எனக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சமல்ல. இன்றுவரையில் அதற்கான இழப்பீடு தரப்படவில்லை. இதன் பின்னணியில் முழுக்க அரசியலே காணப்பட்டது. அது குறித்து நான் இப்போது அலட்டிக் கொள்ளவில்லை.

சரி அது போகட்டும். உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் பயணம் எவ்வாறானது?

எனது இந்த அரசியல் பயணம் முழுக்க பேருவளை மக்களை இலக்காகக் கொண்டதாகும். இம்முறை பதவிக்கு வந்த கையோடு முதற்கட்டமாக எனது கொந்தப் பணத்தின் மூலம் 15 இலட்சம் ரூபாவை செலவிட்டு சில முக்கியமான இடங்களுக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளேன். அதேபோன்று நகரசபை நிதியிலிருந்து 10 கோடியளவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

பல வீதிகளுக்கு காபட் போட்டுள்ளேன். பல வீதிகள் செப்பனிடப்பட்டுவருகின்றன.

இது விடயத்தில் இன, மத, வேறுபாடு காட்டப்படவில்லை. முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் வாழும் சகல பகுதிகளையும் சமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றேன். அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் அவசியமான தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொடுப்பதே எனது நோக்கமாகும்.


வீதி புனரமைப்பு வேலைகளை தனியாருக்கு கொந்தராத்துக் கொடுக்கப்போவதில்லை அதனை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கே வழங்கப்படும். இங்குள்ள அனைத்துக் குளங்களும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சிச் சபைகளில் சிறந்த சபைகளில் எமது பேருவளை நகரசபை நான்காம் இடத்தில் உள்ளது. இதனையிட்டு மேல்மாகாண முதலமைச்சரும், மாகாண ஆளுனரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். நாம் தயாரித்துள்ள வேலைத்திட்டம் 40 ஆண்டுகளில் நிறைவேறக் கூடியனவாகும்.

ஆனால் அதனைதான் நாலே ஆண்டுகளில் செய்து முடிக்க உறுதி பூண்டிருக்கின்றேன் இரவு பகல்பாராது அனைவரதும் ஒத்துழைப்புடன் இதனைச் செய்து முடிப்பேன். நகரசபையிலுள்ள சகல உறுப்பினர்களும் என்னோடு கைகோர்ப்பதாக உறுதியளித்திருக்கின்றனர் இது மகிழ்ச்சிதரக்கூடிய தாகும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எமது பணியாகும். நாம் தலைவர்கள் அல்ல. மக்கள் சேவகர்கள் என்பதை நிரூபித்துக்காட்டுவோம்.

5 comments:

  1. Good luck and we need people like you in North

    ReplyDelete
  2. Congratulations Mr. Chairman!! Keep it up!!

    ReplyDelete
  3. உங்களை எனக்கு 35வருடமாக தெரியும் நீங்கள் நல்ல மனிதர்

    ReplyDelete
  4. அனுஷாத், இவரை வட மாகாணத்துக்கு நியமித்தால், பயங்கரவாதி என்று கூறி விரட்டி விடுவார்களே

    ReplyDelete
  5. அனுஷாத், இவரை வட மாகாணத்துக்கு நியமித்தால், பயங்கரவாதி என்று கூறி விரட்டி விடுவார்களே

    ReplyDelete

Powered by Blogger.