அவுஸ்திரேலியாவில் அகோர வறட்சி, விவசாயிகளுக்கு பயங்கர அனுபவம்
அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவூத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் வறட்சிப் பிராந்தியமாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆஸ்திரேலியாவின் சமகால வரலாற்றில் இதுவே மிகவும் மோசமான வறட்சியாகக் கூறப்படுகிறது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலம் அவுஸ்திரேலியாவின் கால்பங்கு விவசாய உற்பத்திகளை கொண்டுள்ளது. அது 100 வீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலையிலும் நீர் தட்டுப்பாடு காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் விவசாயிகள் தமது பயங்கர அனுபவங்களை விபரித்துள்ளனர்.
சிலர் தமது கால்நடைகளுக்கு உணவு அளிப்பதற்கான வைக்கோல் நிரப்பிய டிரக் வண்டி ஒன்றுக்கே 10,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை செலவிடவேண்டி இருப்பதாக பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டுள்ளார்.
“ஒவ்வொரு தினமும் சிறையில் இருப்பது போல் உள்ளது” என்று குவீன்ஸ்லாந்து விவசாயியான ஆஷ்லி கம்பில் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை விவசாயியான டேவிட் கிரஹாம் மழையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார். “வறட்சியில் வாடும் கடினமான நேரத்தில் எமது சமூகத்தினர் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகின்றனர்” என்றார்.
நகரப்புறங்களை விடவும் கிராமப்பகுதிகளில் சராசரியாக தற்கொலை அளவு 40 வீதமாக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய மனநல சுகாதார குழுவான சேன் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரலியா தனது இரண்டாவது வறட்சியான இளையுதர் காலத்தை சந்தித்துள்ளது. அங்கு சராசரியை விடவும் குறைவாக 57 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகி இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் உட்பட பல காரணங்களால் அவுஸ்திரேலிய காலநிலை ஆண்டுக்கு ஆண்டு இயற்கையாக மாற்றங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 140 மில்லியன் டாலர் உதவித் தொகை வழங்குவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து, ஆஸ்திரேலியாக்கு குடி பெயர்ந்தவர்கள் நிலை?
ReplyDelete