Header Ads



'ராஜபக்சவின் தீய வட்டம்' என்றால் என்ன..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஒரு தசாப்த கால தீய வட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்து வருவதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -30- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் 5 ஆம் திகதி ராஜபக்ச தரப்பினர் அல்லது கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முழு கொழும்பு நகரமும் செயலிழக்கும். கொழும்பு நகரம் விடுமுறை தினம் போல் இருக்கும். மக்கள் கஷ்டங்களை அனுவிப்பார்கள் என கம்மன்பில கூறியுள்ளார்.

உதய கம்மன்பில கூறியது உண்மையே. மகிந்த ராஜபக்ச எந்த வேலையை செய்தாலும் அது பொது மக்களுக்கு கஷ்டம்தான். கடந்த ஒரு தசாப்தமாக மகிந்த ராஜபக்ச பொதுமக்களை கஷ்டங்களுக்கே உள்ளாகினார்.

இதனால், உதய கம்மன்பில இதனை புதிதாக கூறவேண்டியதில்லை. கடந்த ஒரு தசாப்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் செயல்கள், வேலைத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கு கஷ்டங்களை கொடுப்பதாக இருந்தன மக்கள் பீதியடைந்தனர்.

இதனை நாங்கள் ராஜபக்ச தீய வட்டம் என்று கூறுகிறோம். ராஜபக்சவின் தீய வட்டத்திற்குள் கடந்த ஒரு தசாப்த காலத்தில் மக்கள் சிக்கிக்கொண்டனர். அந்த தீய வட்டத்தை மீண்டும் கொண்டு வரவே முயற்சித்து வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கையில் எடுப்பதே தீய வட்டம், அதிகாரத்தை கைப்பற்றுவார், கைப்பற்றிய பின்னர் சீனாவிடம் கடன் வாங்குவார். அதன் பின்னர் கடனை செலுத்த வரியை அறவிடுவார். மக்கள் வரியை செலுத்துவார்கள்.

வரிப் பணத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு கமிஷன் கிடைக்கும். அந்த பணத்தை தனக்கு கீழ் உள்ளவர்களிடம் வழங்குவார். அதனை பயன்படுத்தி உணவு, குடிப்பானங்களை கொடுத்து மக்களை கொழும்புக்கு அழைத்துவர செய்வார்.

மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பார். இதுதான் மகிந்த ராஜபக்சவின் தீய வட்டம். கடந்த காலங்களில் கமிஷன் பணமாக மகிந்தவுக்கு 7 மில்லியன் டொலர்கள் கிடைத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை செலவிட்டு மக்களை கொழும்புக்கு அழைத்து வருவார்கள்.

தனது தீய வட்டத்தில் இருந்து மக்கள் மீள முயற்சித்த போது, மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்களை கடத்தினார் அல்லது தாக்கினார் அல்லது கொலை செய்தார், சிறையில் அடைத்தார்.

அனைத்தையும் முற்றிலும் தரை மட்டமாக்கினார். இதுதான் மகிந்த ராஜபக்ச கடந்த தசாப்தத்தில் மக்களுக்கு கொடுத்த கஷ்டம். இவற்றில் இருந்து மீள முயற்சித்த கீத் நொயார் தாக்கப்பட்டார், லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.

பிரகீத் எக்னேலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். மக்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது தாக்கப்பட்டனர். மகிந்த ராஜபக்சவின் அழுத்தங்களில் இருந்து விடுபட நினைத்தவர்களுக்கு இப்படியான பதில்களே வழங்கப்பட்டன.

உதய கம்மன்பில உண்மையை கூறியுள்ளார். உதய கம்மன்பில அரசியலுக்கு புதியவர் என்பதால், தாம் என்ன செய்ய போகிறோம் என்ற உண்மையை கூறியுள்ளார் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.