Header Ads



அஷ்ரஃப் சிஹாப்தீனின் "தேவதைகள் போகும் தெரு"

அஷ்ரஃப் சிஹாப்தீனின் மூன்றாவது கவிதைத் தொகுதியான 'தேவதைகள் போகும் தெரு' நூல் வெளியீடும், சமூக ஊடக நண்பர் வட்டம் அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 08.09.2018 அன்று பி.ப. 4.30க்கு கொழும்பு - 10, அல்ஹிதாயா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. 

கவிஞர் அல் அஸூமத் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும், சிறப்பு அதிதியாக பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்ள, நூல் நயவுரைகளை மூத்த கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன், கவிஞரும் ஒலிபரப்பாளருமான முல்லை முஸ்ரிபா, சட்டத்தரணி ஹஸனா ஷெய்கு இஸ்ஸதீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். 

சமூக ஊடக நண்பர்கள் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முறையே முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை ஓட்டமாவடியைச் சேர்ந்த ஷியான் யாக்கூப், பதுளையைச் சேர்ந்த எம்.எச்.எப். ரிழானா, ஒலுவிலைச் சேர்ந்த சொல்லன்பன் நஸ்ருதீன் ஆகியோர் பெற்றுள்ளனர். 

மூதூர் முகைதீன், எம்.எம். விஜிலி, எஸ். சிவலிங்கம், எம்.சி. நஸார், தலால் பாஸி அகமட் ஆகியோரின் கதைகள் கவனத்துக்குரிய சிறுகதைகளாகத் தெரிவாகியுள்ளன. இவர்கள் அனைவருக்குமான பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படும். 

நூல் வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளை கவிஞர் நாச்சியா தீவு பர்வீன் தொகுத்து வழங்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.