டிஜிட்டல் மயமாகவுள்ள கொழும்பு
கொழும்பு மாநகர சபையின் புத்தர் சிலையை நான் அகற்றவில்லை. இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டை பிக்கு ஒருவர் முன்வைப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
மூவின மக்களை நான் சரி சமமாகவே வழிநடத்துவேன். நான் இன, மத பேதங்கள் பார்க்கமாட்டேன். நான் மேயராக அமர்ந்த நாள் முதல் இதுவரை எனது காரியாலயத்தின் கதிரைகளைக் கூட மாற்றவில்லை.
கொழும்பு மாநகரத்தை இன்னும் இரு வருடங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர மக்கள் கட்டட அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இதனால் சாதாரண மக்கள் மாத்திரமின்றி அமைச்சர்கள் கூட பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். வரிசை வரிசையாகக் காத்திருந்து 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது.
ஆனால் தற்போது அதனை நாம் டிஜிட்டல் மயப்படுத்தியுள்ளோம். தற்போது இணைத்தளத்தின் ஊடாக விண்ணப்பம் செய்து பணத்தை செலுத்தி வெகு விரைவாக அனுமதிப் பத்திரத்தை பெற முடியும். அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு மாத்திரமே கொழும்பு மாநகர சபைக்கு வர வேண்டும். விண்ணப்பம் செய்து 14 நாட்களுக்குள் இடைக்கிடையே விண்ணப்பம் செய்தவர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் தமது விண்ணப்பத்தின் நிலைமை எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதை குறுந்தகவலின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
எனவே தற்போது நீல பசுமை நகரமாகவும் டிஜிட்டல் துறையில் மேம்பட்ட நகரமாகவும் வர்த்தகத்துறையில் பெரும் முன்னேற்றம் கண்ட மாநகரமாகவும் கொழும்பு நகரத்தை மாற்றியமைப்போம். அத்துடன் இன்னும் இரு வருடங்களுக்குள் கொழும்பு மாநகரத்தை டிஜிட்டல் நகரமாக மாற்றியமைப்போம். மேலும் கொழும்பு மாநகர சபையின் எனது காரியாலயத்துக்கு முன்பு இருந்த புத்தர் சிலையை நீக்கியதாக ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.
அது உண்மைக்குப் புறம்பான தகவலாகும். நான் ஒருபோதும் புத்தர் சிலையை நீக்கவில்லை. தற்போதும் புத்தர் சிலை உள்ளது. இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டை பிக்கு ஒருவர் முன்வைப்பதையிட்டு நான் கவலை அடைகின்றேன். மூவின மக்களை நான் சரி சமமாகவே வழிநடத்துவேன். இன, மத பேதங்கள் நான் பார்க்கமாட்டேன். நான் மேயராக அமர்ந்த நாள் முதல் இதுவரை எனது காரியத்தின் கதிரைகளை கூட மாற்றவில்லை. அத்துடன் முன்னாள் மேயர்களின் சன்மானங்களை கூட நான் நீக்காமல் அப்படியே வைத்துள்ளேன்.
பொய் குற்றச்சாட்டுகளை நாம் கண்டுக்கொள்ளாது கொழும்பு நகரை அபிவிருத்தி அடைந்த நகரமாக மாற்ற வேண்டும். துறைமுகர் நகர் திட்டம் பூர்த்தியானதும் பாரிய மாற்றங்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆகவே தற்போது அதற்கு நாம் தயாராக வேண்டும். மேலும் கொழும்பு நகரில் டெங்கு நோய் தாக்கத்தை 45 வீதமாக குறைத்துள்ளோம். என்றார்.
கட்டட அனுமதிப் பத்திரத்தை இணையத்தளங்களின் ஊடாக துரிதகதியில் பெற்றுக்கொள்வதற்கான டிஜிட்டல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மாநகர சபையின் வெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Late! Better late than never
ReplyDelete