இலங்கையில் ஜப்பானிய விமானி அழித்த, எண்ணெத் தாங்கியை பார்வையிட்ட ஜப்பான் அமைச்சர்
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில் உள்ள எண்ணெய்த் தாங்கியை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்று முன்தினம் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதன் போது அவர் சீனக் குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட எண்ணெய்த் தாங்கிகளையும் பார்வையிட்டார்.
இலங்கை பிரித்தானியர் ஆட்சியில் இருந்த போது, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த ஜப்பானியப் போர் விமானங்கள், திருகோணமலை துறைமுகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருந்தன.
1942 ஏப்ரல் 9ஆம் நாள் நடத்தப்பட்ட அந்த தாக்குதலின் போது, ஜப்பானிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று, சீனக்குடா எண்ணெய் தாங்கி ஒன்றின் மீது மோதி வெடித்தது.
கமிகாசி எனப்படும் ஜப்பானிய விமானப்படையின் தற்கொலைப்படை விமானி ஒருவரே, இந்த தாக்குதலை நடத்தியிருந்தார்.
இந்த தாக்குதலை அடுத்து சீனக்குடா எண்ணெய் தாங்கியில் பற்றிய தீ ஏழு நாட்களாக எரிந்து கொண்டிருந்தது.
தற்போதும், அழிந்த நிலையில் காணப்படும் அந்த எண்ணெய் தாங்கியையே ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்த இடத்தைப் பார்வையிட்ட ஜப்பானின் உயர்மட்டத் தலைவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment