Header Ads



பாலியல் குற்றம்புரிந்த பாதிரியார்களுக்கு ஆதரவளித்த, பாப்பரசரை பதவிவிலக கோரிக்கை

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பதவியில் இருந்து பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என வாட்டிகன் அரண்மனையின் முன்னாள் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களில் அருள்பணியாளர்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் அதே விதிமுறைகள், ஆயர்கள் அல்லது கர்தினால்களுக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, திருச்சபையின் உயர் அதிகாரியான சீன் ஓ’மல்லே சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் தியோடர் மெக்காரிக் என்பவருக்கு எதிராக, பல, பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள, பாஸ்டன் பேராயரும், சிறார் பாதுகாப்பு குறித்த திருப்பீட குழுவின் தலைவருமான கர்தினால் சீன் ஓ’மல்லே இவ்வாறு கூறினார்.

இவ்விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், கத்தோலிக்கச் சமுதாயத்தின் நேர்மையான கோபத்திற்குப் போதுமான அளவில் பதிலும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறார் மற்றும் வயதுவந்தோரிடம் பாலியல் முறையில் தவறாக நடந்துகொண்டு, கன்னிமை வார்த்தைப்பாட்டை மீறுகின்ற ஆயர்கள் விவகாரத்தில், உறுதியான மற்றும் தெளிவான கொள்கைகள்  திருச்சபைக்குத் தேவைப்படுகின்றன.

பாலியல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்துதல், எல்லா நிலைகளிலும், குறிப்பாக, ஆயர்களைப் பொறுத்தவரை, திருச்சபையின் நிலைப்பாடு மற்றும் கொள்கைகளில் போதுமான மதிப்பீடு செய்தல்,  ஆயர்கள் மற்றும் கர்தினால்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கையாளப்படும் நடைமுறைகள் குறித்து, விசுவாசிகளுக்கு மிகத் தெளிவாக அறிவித்தல் ஆகிய மூன்று செயல்திட்டங்கள் அவசியம் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

இதற்கிடையில், அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அங்கு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததுடன் இந்த பாவச்செயல் புரிந்தோரை மன்னிக்கும்படி கடவுளிடம் இன்று பிரார்த்தனை செய்தார்.

இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பதவியில் இருந்து பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என வாட்டிகன் அரண்மனையின் முன்னாள் அதிகாரியான கார்லோ மரியோ விகானோ என்பவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, 11 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, அமெரிக்காவில் பாதிரியார் மெக்காரிக் நடத்திய பாலியல் லீலைகளை கடந்த 2013-ம் ஆண்டு அவர் போப் ஆக பதவியேற்ற காலத்தில் நான் பிரான்சிஸிடம் தெரிவித்தேன். 

ஆனால், போப் பிரான்சிஸிடம் நான் மெக்காரிக்கை பற்றி நேரடியாக புகார் அளித்தும் அவர் மீது 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்துக்காக அவரது போப் பதவியை பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும்.

தேவாலயங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என போப் பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்துள்ளார். சர்வதேச தேவாலயம் தற்போது சந்தித்துள்ள நெருக்கடியான நிலையில் தனது தவறுகளை அவர் உணர வேண்டும். 

அதற்கு முன்னர் மெக்காரிக்-கின் நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டிலேயே வாட்டிகன் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். 

கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள இரு திருச்சபைகளில் பணியாற்றியபோது அங்கு திருமறை பயில வந்த ஆண்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, மெக்காரிக் தகாத முறையில் நடந்து கொள்வதாக எனது புகாரில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், எனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு பதிலும் கிடைக்கவில்லை.

சகித்து கொள்ளவே முடியாது என்று அவர் எதைப்பற்றி அடிக்கடி கூறிவந்தாரோ, அதை நினைவில் வைத்து, மெக்காரிக் காரிக்கின் தவறுகளை மறைத்த இதர கர்டினால்கள் மற்றும் பிஷப்புகளுடன் சேர்ந்து போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் கார்லோ மரியோ விகானோ வலியுறுத்தியுள்ளார்.

போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என தற்போது போர்கொடி தூக்கியுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, கடந்த 2001-2006 ஆண்டுகளுக்கிடையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வாட்டிகன் அரண்மனை தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அந்தோனியாரின் கூட்டம், ரொம்ப கேவலமா இருக்கு. ஜீசஸ், மகதலினா மரியாளை திருமணம் முடித்துவிட்டார். refer dead sea scroll

    ReplyDelete
  2. யார் யாரைக்கண்டிப்பது?பாம்பின் காலைப்பாம்பு அறியும்.மனிதத்திருவிளையாடல்கள் மதத்திற்குள் நுழைந்தால் இவைகளையே உற்பத்திப்பொருள்களாக பெறவேண்டி வரும்.அதிலென்ன தவறு.தவறு எங்கோ உளது.

    ReplyDelete

Powered by Blogger.