கொழும்பில் மகிந்த தலைமையில் 'ஜனபல சேனா' போராட்டம்
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஜனபல சேனா' ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி விகாரமாதேவி பூங்கா வரை சென்றது. இதில் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்க கூடாது, பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டதுடன் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தலை நிறுத்துங்கள், இந்த அரசாங்கம் எமக்கு வேண்டாம், நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே ஆகிய கோஷங்களும் எழுப்பப்பட்டன.
விகாரமாதேவி பூங்கவில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment