ஒவ்வொரு பௌர்ணமிக்கும், அரசாங்கத்தைக் கவிழ்க்கப் கணக்குப் போடுகின்றனர்
அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாகக் கூறி நடத்தப்படும் பேரணிகளால் மூட்டுவலி தைலக்காரர்களுக்கே நன்மை ஏற்படுகிறது. அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகக் கூறி மஹிந்த ஆதரவு அணியினர் பாரிய போரணியை நடத்தப்போவதாகக் கூறியுள்ளனர். கடந்த காலத்திலும் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்பட்டன.
இவற்றினால் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மூட்டுவலி தைலங்களை உற்பத்திசெய்யும் கம்பனிகளுக்கே இவர்களால் நன்மை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் மஹிந்த ஆதரவு தரப்பினர் கண்டியிலிருந்து பேரணி நடத்தினர். அந்தப் பேரணியுடன் அரசாங்கம் கவிழும் என்றார்கள்.
அதன் பின்னர் காலிமுகத்திடல் மைதானத்தை நிரப்பி அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்றார்கள், லிப்டன் சுற்றுவட்டத்தை நிரப்பி அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்றனர். இதுவரை அரசாங்கத்தில் எந்த அசைவையும் அவர்களால் மேற்கொள்ள முடியவில்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
மஹாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர்கள் இதனைக் கூறினர்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகக் கூறி கணக்குப் போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து வருகிறது. அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லையென அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment