கடிவாளமிடப்படாத பிசாசினால், A/L மாணவர்களுக்கு எற்பட்ட கொடுமை
சமூக வலைத்தளங்களும் இணையத் தளங்களும் புரிகின்ற தில்லுமுல்லுகளுக்கு எல்லையென்பது கிடையாது. இவற்றில் வெளிவருகின்ற தகவல்களையெல்லாம் மக்களில் பெரும்பாலானவர்கள் இப்போதெல்லாம் நம்புவது கிடையாது. ஆனாலும் இன்னும் சிலர் இத்தகவல்களையெல்லாம் உண்மையென்று நம்பியபடி ஏமாந்து போகின்றார்கள்.
பாமர மக்கள் மாத்திரமன்றி, கற்றறிந்தோரும் இத்தகவல்களையெல்லாம் உண்மையென்று நம்பியபடி வீணாக ஏமாந்து போவதுதான் பெரும் பரிதாபம்!
இவ்வாறுதான் கடந்த வாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிலரும் பரிதாபமாக ஏமாந்து போயிருக்கிறார்கள்.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களமானது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான சரியான நேரஅட்டவணையை அனுமதி அட்டையில் குறிப்பிட்டு முன்கூட்டியே மாணவர்களுக்கு அனுப்பி வைத்து விட்டது. பாடசாலைகள் ஊடாகத் தோற்றுகின்ற பரீட்சார்த்திகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் நேரசூசியுடன் கூடிய பரீட்சை அனுமதி அட்டைகள் நேரகாலத்துடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
பரீட்சைகள் திணைக்களம் அனுப்பியிருந்த நேர அட்டவணையின்படி பரீட்சை மண்டபத்துக்குச் சென்றிருக்க வேண்டியதுதான் பரீட்சார்த்திகளின் பொறுப்பு.
ஆனாலும் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த நேரஅட்டவணையைப் பார்த்து பரீட்சை மண்டபத்துக்கு பரீட்சை எழுதச் சென்றிருந்த மாணவர்கள் சிலர் பரிதாபமாக ஏமாந்து போயிருக்கிறார்கள் என்ற செய்தி சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது.
இம்மாணவர்கள் பிற்பகல் வேளையில் பரீட்சை மண்டபத்துக்குச் சென்றிருந்த போது, அன்றைய பாடத்துக்குரிய பரீட்சை முற்பகலிலேயே நடந்து முடிந்து விட்ட செய்தி மாணவர்களுக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது.
இம்மாணவர்களுக்கு ஏற்பட்டது ஏமாற்றம் மாத்திரமல்ல... அவர்களது கல்விப் பயணத்தில் ஒரு வருட கால பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் ஒரு வருட காலத்துக்கு அவர்கள் கடுமையாகப் பயின்று அடுத்த வருட பரீட்சைக்குத் தயாராக வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர். மாணவர்களின் கல்வியைப் பொறுத்தவரை ஒரு வருட கால தாமதமென்பது சாதாரண ஒன்றல்ல.
பரீட்சைத் திணைக்களமானது கொஞ்ச காலத்துக்கு முன்னர் வேறொரு நேரஅட்டவணையைத் தயாரித்திருந்ததாகவும், அதனையே குறித்த இணையத்தளம் அவசரப்பட்டு வெளியிட்டு விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளிவருகின்றன.
ஆனாலும் இவ்விடயத்தில் பரீட்சைகள் திணைக்களத்தைக் குற்றம் சாட்டுவது நியாயமல்ல. பரீ்ட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நேரஅட்டவணையை சரியானதாக ஏற்றுக் கொண்டு அதனை வெளியிட்டிருந்த இணையத்தளமே இத்தவறுக்கு முழுப் பொறுப்பு!
அதேசமயம் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த உறுதிப்படுத்தப்படாத நேரஅட்டவணையை உண்மையென்று நம்பி பரீட்சையைத் தவற விட்ட மாணவர்களின் அறிவீனத்தை இங்கே என்னவென்று விபரிப்பது?
பரீட்சைகள் திணைக்களம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேரசூசியை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்திருக்கும் போது, அதுவே உறுதிப்படுத்தப்பட்ட நேரஅட்டவணை ஆகும். அவ்வாறிருக்கையில் இணையத்தளங்கள் புரிகின்ற தில்லுமுல்லுகளுக்கு பரீட்சைத் திணைக்களம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?
சமூக ஊடகங்களும் இணையத்தளங்களும் இவ்வாறுதான் எமது மக்களை முட்டாளாக்கி குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களும் இணையத் தளங்களும் ‘கடிவாளமிடப்படாத பிசாசு’ போல ஆகி விட்டன. அங்கே எந்தவொரு தகவலுக்கும் செய்தி மூலங்களோ, ஆதாரங்களோ அவசியமில்லை. தங்களை வந்தடைகின்ற வதந்திகளை அடிப்படையாக வைத்தபடி எழுந்தமானமாக போலிச் செய்தியொன்றை உருவாக்கி பதிவேற்றுகின்ற எல்லையற்ற ஊடக சுதந்திரம் சமூகவலைத் தளங்களுக்கும், இணையத் தளங்களுக்கும் தற்போது இருக்கின்றது. ஊடகத்துறை தொடர்பான அனுபவத்தையும் அறிவையும் சற்றேனும் கொண்டிருக்காத ‘பிரகிருதிகள்’ எல்லாம் கற்பனைகளையும் போலிகளையும் அபாண்டங்களையம் பதிவேற்றக் கூடிய பொறுப்பற்ற ஊடகமாக சமூகவலைத் தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இணையத்தளங்களில் ஒன்றிரண்டு மாத்திரமே பொறுப்புடனும், நடுநிலைத் தன்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனையவையெல்லாம் சமூகப் பிரக்ைஞயற்ற ‘கடிவாளமிடப்படாத பிசாசுகள்’!
இணையத்தளங்களில் ஏராளமானவை மக்களைப் பரவசமூட்டும் நோக்குடனேயே செய்திகளையம் கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், நொந்து போன மக்களைக் காட்சிப் பொருளாக்கி பிரபல்யம் தேடுவதிலும், மோதல்களுக்கு வழிகோலும் வகையிலும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற இணையத்தளங்கள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏராளமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.
சமூக அங்கீகாரம் பெற்ற தேசிய ஊடகங்களையும், மனம் போன போக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இணையத்தளங்களையம் பிரித்தறிந்து சீர்தூக்கிப் பார்க்கின்ற ஞானம் எமது மக்களுக்கு இனிமேலாவது மிகவும் அவசியம். இல்லையேல் உயர்தரப் பரீட்சை எழுதச் சென்று ஏமாந்து போன மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை போன்று எதிர்காலத்திலும் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புண்டு.
ஊடகம் என்பது எவராலும் இலகுவில் கையாளக் கூடியதொரு துறையல்ல என்பதை நாமெல்லாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அச்சு ஊடகத்தையோ அன்றி இலத்திரனியல் ஊடகத்தையோ எந்தவொரு தனிநபரும் ஆரம்பிப்பதற்கான சுதந்திரம் இருக்கிறது. ஆனாலும் நெறிமுறை சார்ந்த எல்லைவரம்பு தெரியாதபடி மனம்போன போக்கில் எதனையும், எவ்வாறும் பதிவேற்றுவது தரம் வாய்ந்த ஊடக செயற்பாடு அல்ல.
ஊடகத்துறைக்கென்று நீண்டதொரு வரலாறு உண்டு. நெறிமுறைகள், கட்டுக்கோப்புகள், வரையறைகள் போன்றனவெல்லாம் அங்கே இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கையில் சில தேசிய ஊடகங்கள் அத்தனை நவீன ஊடக சவால்களுக்கும் தாக்குப் பிடித்தபடி முக்கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இன்னுமே வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
(தினகரன் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)
சமூக வளைத்தளங்கள் மற்றும் இணையங்களின்மூலம் தான்தோன்றித்தனமுடைய காளான் கூலான்களெல்லாம் ஊடகத்துரையில் புகுந்து வேளைசெய்கின்றமைக்கு இதுவம் நல்ல உதாரணம்.
ReplyDelete