கேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச் - சாம்சங்கின் புதிய அறிமுகங்கள்
பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும் கால் பதிந்திருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த வருடத்திற்கான கேலக்ஸி நோட் மாடலை நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். அது மட்டுமின்றி இன்னும் சில தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பிரபலமான Fortnite என்ற விளையாட்டை மொபைலுக்கு கொண்டு வந்திருக்கிறது சாம்சங். முதலில் இது சில கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும்.
கேலக்ஸி நோட் 9
கடந்த வருடம் வெளியான கேலக்ஸி நோட் 8 -உடன் ஒப்பிடும் போது வடிவமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதே பழைய வடிவமைப்புதான். கடந்த முறையே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பின்புறமாக கேமராவிற்கு பக்கவாட்டில் மாற்றப்பட்டிருந்த நிலையில் அதைப் பயன்படுத்துவதற்கு சிரமமாக இருந்ததாகப் பலர் தெரிவித்திருந்தனர். எனவே இந்த முறை அதன் இடம் கேமராவிற்கு கீழே மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம் போலவே இதில் S Pen தான் ஸ்பெஷல். ப்ளூடூத் மூலமாகத் இது ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் ஆகிக் கொள்ளும்.இதன் மூலமாக கேமரா, ஆப்ஸ் என மொபைலில் இருக்கும் விஷயங்களை திரையைத் தொடாமலேயே கன்ட்ரோல் செய்ய முடியும். இதன் முனையில் 4096 பிரஷர் லெவல்கள் இருப்பதால் இதைத் திரையில் பயன்படுத்தும் போது எந்த உறுத்தல்களும் இருக்காது. எடுத்துக்காட்டாக இதன் மூலமாகத் திரையில் எழுதினால் பேப்பரில் எழுதுவதைப் போலவே உணர முடியும்.
6.4 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. நோட் 7-னை விட பேட்டரியின் அளவு இதில் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,000mAh பேட்டரி ஒரு நாள் முழுவதும் இந்த ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்த போதுமானதாக இருக்கும். 2.8GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 புராஸசர் இதில் இருக்கிறது. பின்புறமாக இருக்கும் 12+12 MP கேமராக்கள் டூயல் பிக்சல், PDAF, OIS போன்ற வசதிகளைக் கொண்டிருக்கின்றன. முன்புறமாக 8MP கேமரா இருக்கிறது. இதை வாங்கிவிட்டால் மொபைலில் இடமில்லையே என்று கவலைப்படவே தேவையிருக்காது. அதற்கேற்றவாறு இந்த மொபைலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரியை கொடுத்திருக்கிறது சாம்சங் இதைத் தவிர்த்து கூடுதலாக 512 ஜிபி மெமரி கார்டையும் பயன்படுத்த முடியும். இரண்டு வேரியன்ட்களில் கேலக்ஸி நோட் 9 விற்பனைக்கு வருகிறது. 512 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் வேரியண்ட் 84,900 ரூபாய்க்கும், 128 ஜிபி / 6 ஜிபி ரேம் வேரியண்ட் 67,900 ரூபாய்க்கும் கிடைக்கும்.
கேலக்ஸி ஹோம்
ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும் கால் பதிந்திருக்கிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதால் இந்த ஸ்பீக்கரின் வடிவத்தை முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பொதுவான வடிவமைப்பில் இருந்து மாறுபட்டு மூன்று கால்களுடன் தோற்றமளிக்கிறது. எட்டு மைக்ரோபோன்களும், ஆறு ஸ்பீக்கர்களும் இதனுள்ளே பொருத்தப்பட்டிருப்பதனால் இதன் மூலமாக சிறப்பான அனுபவத்தைப் பெற முடியும். கேலக்ஸி ஹோமை "Hey Bixby” என்று அழைப்பதன் மூலமாக இதனைச் செயல்பட வைக்க முடியும். இதன் விலை மற்றும் இதன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
கேலக்ஸி வாட்ச்
சாம்சங் தனது ஸ்மார்ட் வாட்சிற்கு இதற்கு முன்பு வரை கியர் என்றே பெயரிட்டு வந்தது. அதை தற்பொழுது மாற்றி 'கேலக்ஸி வாட்ச்' என்று பெயர் வைத்திருக்கிறது. AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த வாட்ச்சில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் உண்டு. ஒரு முறை சார்ஜ் செய்தல் இதைத் ஐந்து நாள்களுக்கு மேலாகப் பயன்படுத்த முடியும்.
Post a Comment