ஜனாதிபதி வேட்பாளராக 5 பேரின் பெயர்கள் பரிசீலனை
கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திரைமறைவு தலைவராக பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததாகவும் அவருக்கு பதிலாக தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருகிறார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதன் காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசாமல் இருக்கின்றது.
இப்போது 5 பேர் பெயர்கள் கலந்துரையாடப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தயாராக இருக்கின்றனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திரைமறைவு தலைவராக பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததாகவும் அவருக்கு பதிலாக தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருகிறார்.
கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம ஆகிய 5 பேரில் ஒருவரை கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதுடன் இவர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொழும்பில் அடுத்த வாரம் கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கான பொறுப்பு நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment