சுட்டித்தனம் செய்த 4 வயது குழந்தைக்கு, இப்படியா கொடுமை செய்வது..?
தனது நான்கு வயது மகன் சுட்டித்தனம் செய்வதாக கூறி, வீட்டின் அறை ஒன்றில் ஜன்னலில் உள்ள இரும்பு கம்பியில் மகனின் கையை கட்டி வைத்து வதைத்த 21 வயதான இளம் தாயை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையை மீட்ட பொலிஸார், சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கொஸ்வத்தை - கிரிமிட்டியான பகுதியில் வீடொன்றில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குடியேறிய இளம் தம்பதி தாம் குடியேறிய தினத்தில் இருந்து தமது பிள்ளையை ஜன்னல் கம்பியில் கட்டிப் போடுவதாக கொஸ்வத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதற்கு அமைய குறித்த வீட்டுக்கு சென்று பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பிள்ளையை கட்டி வைத்து விட்டு, தாய் சமையல் அறையில் உணவு தயாரித்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டி வைக்கப்பட்டிருந்த பிள்ளையின் மல, சல கழிவுகள் உடலில் பட்டு, துர்நாற்றம் வீசியதாகவும் பிள்ளையை மீட்டு கழுவி சுத்தம் செய்து, அயல் வீட்டில் ஆடையை வாங்கி, அணிவித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைக்கு பொலிஸார் உணவு வழங்கியுள்ளனர். பசியில் இருந்த பிள்ளை நன்றாக சாப்பிட்டுள்ளது.
பொலிஸார் அழைத்துச் செல்லும் போது சற்று சுட்டித்தனம் செய்த பிள்ளை, இரண்டு, மூன்று மணிநேரத்தின் பின்னர், அவர்களுடன் சகஜமாக பழகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையின் தாய் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் பிள்ளையை பொறுப்பான பாதுகாவலரிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவம் குறித்து கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment