பாக்கிஸ்தான், பிரேசில் தூதுவர்களாக 2 முஸ்லிம்கள் நியமனம் - எதிர்ப்பை மீறி தயானை ரஷ்யாவின் தூதராக்கிய ஜனாதிபதி
நாட்டின் இராஜதந்திர நகர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புக்களை மீறி ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
தயான் ஜயதிலகவுடன் இன்னும் ஒன்பது இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வேயிற்கான தூதுவராக அருஷா கூரே, ரஷ்யாவிற்கான தூதுவராக தயான் ஜயதிலக, பிரேசிலுக்கான தூதுவராக எம்.எம்.ஜபீர், கனடாவிற்கான தூதுவராக எம்.கே.கே.கிரிஹகம, போலந்துக்கான தூதுவராக சி.ஏ.எச்.எம்.விஜேரத்ன, சுவீடனுக்கான தூதுவராக எஸ்.எஸ்.கனேகம ஆரச்சி, வியட்நாமுக்கான தூதுவராக எஸ்.எஸ்.பிரேமவர்தன, தென்னாபிரிக்காவிற்கான உயர்ஸ்தானிகராக அனுருத்த குமார மலிமாராச்சி, இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஒஸ்டின் பெர்னாண்டோ, பாக்கிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக நூர்தீன் மொஹமட் ஷஹீட் ஆகியோரே நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலகவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டமைக்கு நாட்டின் சிவில் சமூக அமைப்புக்கள் பெரும் எதிர்ப்பலைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து பாராளுமன்ற உயர்பதவித் தெரிவுக்குழுவிற்கு கடிதமொன்றினையும் கையளித்திருந்தனர்.
பாராளுமன்ற உயர்பதவித் தெரிவுக் குழுவினால் கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட பொது அறிவித்தலில் ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக தயான் ஜயதிலகவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்கு எழுந்த எதிர்ப்புக்களை மீறி தற்போது ரஷ்யாவிற்கான் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிக்கும் கூட்டத்தில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment