ஞானசாரரின் மேன் முறையீடு 29 ஆம் திகதி ஆராய்வு - விடுவிக்கவும் முயற்சி
(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற அவமதிப்பு குறித்து குற்றவாளியாக காணப்பட்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பை பெற்றுக்கொடுக்க பேச்சுக்களை நடத்த புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தீர்மானித்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதியுடனும் அமைச்சரவையிலும் இது குறித்து கலந்துரையாட தான் தீர்மானித் துள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா பொது பலசேனா அமைப்புக்கு அறிவித்துள்ளார்.
பொது பல சேன அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தலைமையிலான குழுவினர் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவை சந்தித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி 19 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட இந்த 19 வருட சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவிக்க இதன்போது மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு கட்டளையிட்டது.
இந் நிலையில், குற்றவாளியான ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கடந்த திங்களன்று சிறு நீரகம் தொடர்பிலான நோய் நிலைமை காரணமாக அவருக்கு சத்திர சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டது. சிரைக்காவலர்களின் பாதுகாப்பில் அவர் தற்போது சிகிச்சைப் பெற்று வரு கினறார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் இடை நடுவே, கலகம் ஏற்படுத்தும் வண்னம் நடந்துகொண்டு நீதிமன்றை அவமதித்ததாக, அப்போது ஹோமாகம பிரதான நீதிவானும் தற்போதைய கொழும்பு பிரதான நீதிவானுமாகிய ரங்க திஸாநாயக்க ஊடாக ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதி மன்றில் முறையிடப்பட்டிருந்தது.
அதன்படி நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தை மையபப்டுத்தி சட்ட மா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த நான்கு குற்றச் சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி, அவர் தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என முதலில் அறிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கொன்றில் ஆஜராகி நீதிமன்றின் கெள்ரவம், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுத்தமை ஊடாக மன்றை அவமதித்தமை, பீ 74/7/10 எனும் வழக்கு (எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்குரித்த வழக்கு ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
அதனை வழி நடத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸை அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டி அவமானப்படுத்தியமை, நீதிமன்றின் கட்டளைக்கு செவிசாய்க்காமை, நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு சவால் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக சட்ட மா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குற்றச்சாட்டுக்களுமே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி முதலாவது, இரண்டாவது குற்றங்கள் தொடர்பில் ஞானசார தேரருக்கு தலா 4 வருட கடூழிய சிறைத் தண்டனையையும், 3 ஆம் குற்றத்துக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையையும், 4 குற்றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையுமாக மொத்தம் 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை 6 வருடங்களில் அனுபவிக்கவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள மேன் முறையீடு எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரப்படவுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment